பொருளியல்

207பொழுதும் ஆறுங் காப்புமென் றிவற்றின்
வழுவி னாகிய குற்றங் காட்டலும்
தன்னை யழிதலும் அவணூ1 றஞ்சலும்
இரவினும் பகலினும் நீவா2 என்றலும்
கிழவோன் தன்னை வாரல் என்றலும்
நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும்
புரைபட வந்த3 அன்னவை பிறவும்
வரைதல் வேட்கைப் பொருள என்ப.

என் - எனின், இது தோழி கூற்றிற் கூறப்பட்ட சில கிளவிக்குப் பயன் உணர்த்திற்று.

தலைமகன் வருகின்ற பொழுதும் நெறியும் ஊரின்கட்காவலும் என்று சொல்லப்பட்டவற்றின்கண் வரும் தப்பினால் உளதாகுங் குற்றங் காட்டலும் . தான் மனனழிந்து கூறலும் , தலைமகட்கு வரும் இடையூறு கூறலும் , தலைமகளைப்4 பகற்குறிவிலக்கி இரவுக்குறி நீ வா என்றலும் , இரவுக்குறி விலக்கிப்பகற்குறி நீ வா என்றலும், தலைமகனை வாராதொழியெனக்கூறலும் , இத்தன்மையவாகிக் குற்றம் பிற பொருளை எடுத்துக் கூறலும், இத் தன்மையவாகிக் குற்றம் பயப்ப வந்த அத்தன்மைய பிறவும் புணர்ச்சி விருப்பமின்மையாற் கூறப்பட்டனவல்ல ; வரைதல் வேண்டும் என்னும் பொருளையுடைய என்றவாறு.

இவையெல்லாந் தோழி கூற்றினுள் கூறப்பட்டன. ஆயின் ஈண்டோதிய தென்னை எனின்; அவை வழுப்போலத் தோற்றும் என்பதனைக் கடைப்பிடித்து அன்பிற்கு மாறாகாது ஒரு பயன்பட வந்ததென உணர்த்துதலே ஈண்டு ஓதப்பட்ட தென்ப. நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும் என்பது நாடும் ஊரும் இல்லுங் குடியும் என ஆண்டோதப்பட்டது . இவை வரைதல் வேட்கைப் பொருளவாமாறும் ஆண்டுக்காட்டப்பட்ட உதாரணத்தான் உணர்க.

(15)

1. அவனூ.
2. நீவரல்.

3. அவை ஊடற்கண் இன்றியும் தலைவனக் கொடியன் என்றலு நொதுமலர் வரைகின்றார் என்றலும், அன்னை வெறி எடுக்கின்றாள் என்றலும் பிறவுமாம்.

(தொல். பொருள். 211. நச்சி.)

4. தலைவனை(நச்சி).