பொருளியல்

213உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்
வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே.

என் - எனின். இதுவுமோர் மரபு உணர்த்திற்று.

உயர்ந்தோர் கூற்று வழக்குவழிப்படுதலின் வழக்குப்படுதல் செய்யுட்குக் கடன் என்றவாறு.

எனவே, வழக்கழியவருவன செய்யுட்கண் வரப்பெறா என்றவாறு. இதனானே மேலதிகாரத்திற் கூறிய சொல்லும் இவ் வதிகாரத்திற் கூறுதற்கியன்ற பொருளும் வழக்கொடு புணர்ந்தனவே செய்யுட்கண் வருவன ; புணராதன செய்யுட்கண் வரப்பெறா என்றவாறாம். இன்னும் இந் நூலகத்து அகப்பொருளாகவும் புறப்பொருளாகவும் எடுத்தோதப்பட்டதன்றி உயர்ந்தோர் வழக்கொடு பொருந்தி வருவன வெல்லாஞ் செய்யுட்குப் பொருளாகப் புணர்க்க என வெஞ்சிய துணர்த்திய வாறுமாம். உயர்ந்தோர் வழக்கென்றமையானும் பொருளுமின்பமும் கெடாமல் முன்றினுளொன்று பயப்பக் கூறுதல் கொள்க.

(21)