என் - எனின். மேலதற்கோர் புறனடை. அறத்திற் கழிவுடையன பொருட்குப் பயன்படவரின் அதனை வழக்கென்று வழங்குதலும் பழித்ததென்றவாறு. பொருளாவது அகப்பொருளும் புறப்பொருளும். அறத்திற் கழிவு வரும் அகப்பொருளாவது பிறன்மனைக் கூட்டம். பொருட்பயன் வருதலாவது அவராலே பொருள் பெறுதல். அவ்விடத்து இன்பமும் பொருளும் பயப்பினும் அதனை வழங்குதலும் பழிக்கப்பட்டதென்றவாறு. உம்மை முற்றும்மையாகலான் வழக்கென் றுரையற்க என்றவாறு. "எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையுந் தேரான் பிறனில் புகல்." (குறள். 144) என வரும்.புறப்பொருட்கண் அறக்கழி வுடையன பகைவர் தேஎத்து நிரைகோடலும் அழித்தலும் போலப் பொருட்பயன் காரணத்தான் நட்டோர் தேஎத்துஞ் செயல். இவையும் பொருள் பயப்பினும் வழக்கென வழங்குத லாகா என்றவாறு. இதுவும் ஓர் முகத்தான் நீதி கூறியவாறு. "பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை". (குறள். 657) என வரும்.(22)
|