பொருளியல்

216முறைப்பெயர் மருங்கினற்1 கெழுதகைப் பொதுச்சொல்
நிலைக்குரி மரபின் இருவீற்றும் உரித்தே.

என் - எனின். இதுவும் வழுவமைத்தலை நுதலிற்று.

முறைப்பெயராவது-இயற்பெயர் முதலிய பெயரா னன்றி முறைமைப்பற்றி வருவது ; அது தந்தை மகனைக் கூறும்பொழுது தம்முன், தம்பி என்பனவும் கிழவன், தோழன் என்பனவும் போல வருவன.

அப்பெயரகத்துவரும் நன்றாகிய கெழுதகைப் பொதுச் சொல்லாவது பயிற்சியாற் கூறும் `எல்லா' என்பது.

நிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே என்பது - நிற்றற் குரிய மரபினானே யிருபாற்கு முரித்தென்றவாறு. நிற்றற்குரிய மரபின் என்பது இவ்வாறு தோற்றாமையின் என்றவாறு.

"எல்லா, இஃதொத்த னென்பெறான் கேட்டைக்காண்"

(கலித். 61)

என்றவழிப் பெண்பால்மேல் வந்தது.

"எல்லா, தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா
செய்வது நன்றாமோ மற்று."

(கலித். 62)
என்றவழித் தலைமகன்மேல் வந்தது.

இதுவும் ஒரு சொல்வழு அமைத்தவாறு. இச் சொற் காமப் பொருளாகத் தோற்றுதலாற் சொல்லதிகாரத்து ஓதாது ஈண்டு ஓதப்பட்டது.

(24)

1. மருங்கிற்.