என் - எனின். இதுவும் ஒருசார் மரபு வழுவமைத்தலை நுதலிற்று. தாயத்தான் எய்துதலாவது தந்தைபொருள் மகற்குறுதல். ஈயச் சேறலாவது ஒருவன் கொடுப்ப ஒருவன் கோடல். வினைவயிற் றங்கலாவது உழவு முதலியனவற்றான் வருதல். வீற்றுக்கொளப்படுதலாவது வேறுபடுத்திக் கோடல். அஃதாவது பகையினால் வந்தது கோடல். இந் நான்கினும் வரும் பொருளினது உரிமைத்தோற்ற மல்லவாயினும் பொருந்துவ உள என்றவாறு. செய்யா என்னும் வினையெச்சம் வரூஉம் என்னும் பெயரெச்சத்தொடு முடிந்தது. அன்றியும் செய்யா என்பதனைப் பெயரெச்ச எதிர்மறையாக்கி இந் நான்கிலும் வருந்தகவு இல்லாத பொருள் பொருளலவாயினும் எமதெனவரும் உரிமைத் தோற்றம் பொருந்துவ என்றவாறு. அல்லவாயினும் என்பதனை மாறிக்கூட்டுக. எனவே, ஒரு முகத்தாற் பொருள் தேடுவார் திறன் கூறினாருமாம். இனி அக்கிழமைத் தோற்றம் ஆவது, "விரும்பிநீ, என்தோள் எழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கும் நினைத்துக்காண்". (கலித்.18) என்றவழித் தலைமகள் தோளைத் தோழி தன்னையு முளப்படுத்தி எனதெனக் கூறியவாறு காண்க. பிறவுமன்ன.(25)
|