பொருளியல்

218ஒருபாற்கிளவி ஏனைப்பாற் கண்ணும்
வருவகை தாமே வழக்கென மொழிப.

என்-எனின். இதுவு மொருசார் பொருள் கொளுந்திறன் உணர்த்துதல் நுதலிற்று.

ஒருபக்கத்துக் கூறிய பொருண்மை ஒழிந்த பக்கத்துக்கண்ணும் வருவகைதாம் வழக்கு நெறி என்றவாறு.

மனையோள்மாட்டுங்-காமக்கிழத்தி மாட்டும் நிகழும் புணர்ச்சியும் பிரிவும் ஊடலும் பரத்தையர்மாட்டு நிகழும், அது வருமாறு :-

"அன்னை கடுஞ்சொல் அறியாதாள்" (கலித். 97) என்னுங் கலியுள்,
"சிறுகாலை யிற்கடை வந்து குறியெய்த
அவ்வழி என்றும்யான் காணேண்".

என்பது புணர்வு குறித்து வந்தது.

"உள்ளுதொறு நகுவன் தோழி வள்ளுகிர்
மாரிக் கொக்கின் கூர்அல கன்ன
குண்டுநீர் ஆம்பல்தண் துறை யூரன்
தேங்கம ழைம்பால் பற்றி என்வயின்
வான்கோல் எல்வளை வவ்விய பூசற்
சினவிய முகத்துச் சினவாது சென்றுநின்
மனையோட் குரைப்பல் என்றலின் முனையூர்ப்
பல்லா நெடுநிரை1 வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப்
புலம்பிரி2 வயிரியர் நலம்புரி முழவின்
மண்ணார் கண்ணின் அதிரும்
நன்ன ராளன் நடுங்கஞர் நிலையே."

(நற்றிணை. 100)

இஃது ஊடல் குறித்து வந்தது. இப் பரத்தையர் பொருட் பெண்டிராகலின் இன்பம் பயக்குமோ எனின், அஃது இன்பமாமாறு வருகின்ற சூத்திரத்தான் எல்லாப் பொருட்கும் உளதாகும் பொது விலக்கணம் கூறியவாறு.

(26)

(பாடம்) 1. நெடு நெறி.

2. புலம்புரி.