என் - எனின், இது களவின்கண் தலைமகட்குரியதோர் மரபு உணர்த்திற்று. ஒருதலையுரிமை வேண்டினும் என்பது - ஒரு தலையாகத் தலைமகள் உரிமை பூண்டலை வேண்டியவிடத்து மென்றவாறு. மகடூஉப் பிரித லச்ச முண்மை யானும் என்பது - பிரிதற்கண் வரும் அச்சம் பெண்பாற்கு இயல்பாகு மென்றவாறு. அம்பலும் அலரும் களவுவெளிப்படுக்கு மென்று அஞ்ச வந்த வாங்கிரு வகையினும் என்பது - களவொழுக்கத்தை வெளிப்படுக்குமென்று அஞ்சும்படியாக வந்த அம்பலும் அலருமாகிய இருவகையின்கண்ணும் என்றவாறு. நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் என்பது - தலைமகன் வரவு பார்த்திருந்தவழி வந்த இடையூறாகிய பொருளின்கண்ணும் என்றவாறு. அவையாவன:- தாய் துஞ்சாமை, நிலவு வெளிப்படுதல் முதலியன. போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும் என்பது - தலைமகனுடன் போதற் குறிப்பும் வரைவுகடாதற் குறிப்பும் மனைவிமாட்டுத் தோன்றும் என்றவாறு. உதாரணம்"சிலரும் பலரும் கடைக்கண்1 நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறுகோல் வலந்தனள்2 அன்னை அலைப்ப3 அலந்தனென் வாழி தோழி கானற் புதுமலர் தீண்டிய பூநாறு4 குரூஉச்சுவற் கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ5 நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே அலர்சுமந் தொழிகஇவ் அழுங்க லூரே." (நற்றிணை.149) இது போக்குக்குறித்தது `இரும்பிழி மகாஅர்' என்னும் பாட்டு வரைவு குறித்தது. (29)
(பாடம்) 1. கட்கண். 2. வலத்தனள். 3. அலைக்க. 4. பூணாறு. 5. கடுமான் பரிய கதழளி கடைஇ.
|