பொருளியல்

224நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற்
புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே.

என் - எனின். இதுவு மோர் மரபுணர்த்தியது.

கற்புக்காலத்து நிகழாநின்ற தகையின் பக்கத்து வேட்கை மிகுதியாற் புகழ்தலை நீக்கார் என்றவாறு.

களவுக்காலத்து நலம் பாராட்டிய தலைமகன் கற்புக் காலத்து மெழினலம்1 பாராட்டப்பெறும் என்றவாறு.

தகை என்பது அழகு. அதனைப் பற்றிப் புகழும் எனக் கொள்க.

"அணைமருள் இன்றுயில் அம்பணைத் தடமென்றோள்
துணைமலர் எழில் நீலத்2 தேந்தெழில் மலருண்கண்
மணமௌவல் முகையன்ன மாவீழ்வான் நிரை3 வெண்பல்
மணநாறு நறுநுதன் மாரிவீழ்4 இருங்கூந்தல்
அலர்முலை யாகத் தகன்ற அல்குல்
சிலநிரை வால்வளைச் செய்யா யோவெனப்
பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி".

(கலித். 14)

என வரும்.
(32)

1. மொழி நலம்.

2. ஒளி நீலத்.

3. மாநிரை.

4. மாரிமிளிரும்.