என்-எனின். இஃது இறைச்சிப் பொருள்வயிற் பிறக்கும் பிறிதுமோர் பொருள் உணர்த்துதல் நுதலிற்று. இறைச்சிப் பொருள்வயிற் றோன்றும் பொருளும் உள ; பொருட்டிறத்தியலும் பக்கத்து ஆராய்வார்க் கென்றவாறு. இறைச்சிப் பொருள் பிறிதுமோர் பொருள்கொளக் கிளப்பனவுங் கிளவாதனவுமென இருவகைப்படும். அவற்றிற் பிறிதோர் பொருள்பட வருமாறு : - "ஒன்றேன் அல்லென் ஒன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்று கொய்ய மலரு நாடனொடு ஒன்றேன் தோழி ஒன்றி னானே". (குறுந். 208) என்பது வரைவெதிர் கொள்ளாது தமர் மறுத்தவழித் தலைமகனோடு ஒன்றுமாறு என்னெனக் கவன்ற தோழிக்கு உடன் போதற் குறிப்பினளாய்த் தலைமகள் கூறியதாகலின், இதனுட் பொருகளி றென்றமையால் தலைமகள் தமர் தலைமகன் வரைவிற் குடன்படுவோரும் மறுப்பாருமாகி மாறுபட்ட தென்பது தோற்றுகின்றது. `பொருகளிறு மிதித்த வேங்கை' யென்றதனாற் பொருகின்ற விரண்டு களிற்றினும் மிதிப்ப தொன்றாகலின் வரைவுடன்படாதார் தலைமகனை யவமதித்தவாறு காட்டிற்று. `வேங்கை நின்று கொய்ய மலரும்' என்றதனான் முன்பு ஏறிப்பறித்தல் வேண்டுவது இப்பொழுது நின்று பறிக்கலாயிற்று என்னும் பொருள்பட்டது. இதனானே பண்டு நமக்கரியனாகிய தலைமகன் தன்னை யவமதிக்கவும் நமக்கெளியனாகி யருள் செய்கின்றானெனப் பொருள் கொளக்கிடந்தவாறு காண்க.(34)
|