பொருளியல்

230கிழவோள்1 பிறள்குணம் இவையெனக் கூறிக்
கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள்.

என் - எனின். இது தலைமகட் குரியதோர் இலக்கண முணர்த்துதல் நுதலிற்று.

தலைவி மற்றொருத்தி குணம் இத்தன்மையள் எனச் சொல்லித் தலைமகன் குறிப்பினை யறிதற்கு முரியள் என்றவாறு.

இது கற்பியலுட் கூறியதற் கிலக்கணம்.

"கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே
ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே."

(ஐங்குறு.122)

எனவும் வரும்.பிறவு மன்ன.
(38)

1. `பரத்தை' என்னாது `பிறள்' என்றதனால் தலைவியே யாயிற்று. அன்றிப் பரத்தையாயின் ஊடலின்மை அறனன்றாகலின் உள்ளத்தூடல் நிகழ்பவை வேண்டும். (தொல். பொருள். 234. நச்சி)