பொருளியல்

231தம்முறு விழுமம் பரத்தையர் கூறினும்
மெய்ம்மை யாக அவர்வயி னுணர்ந்தும்
தலைத்தாட் கழறல்தம் எதிர்ப்பொழு தின்றே
மலிதலும் ஊடலும் அவையலங் கடையே.

என்-எனின். இது தலைமகட்குரியதோர் மரபுணர்த்திற்று.

பரத்தையர் தாமுற்ற துன்பத்தினைத் தலைமகட்குக் கூறியவழியும் அவரிடத்துத் துன்பத்தை மெய்ம்மையாக உணர்ந்துவைத்துந் தலைமகன்மாட்டுக் கழறுதல் தலைவன் எதிர்ப்பட்டபொழுது இல்லை. மகிழ்ச்சியும் புலவியும் அல்லாத காலத்து என்றவாறு.

கூறினும் என்ற உம்மை எதிர்மறை. கூறாமை பெரும்பான்மை. அதனை ஐயப்படாது துணிதலான் மெய்மையாக வென்றார். அதனைத் தலைமகன் வந்தவழிக் கூறுவாளாயின் தனக்குப் புணர்ச்சியிற் காதலில்லையாம். சொல்லாளாயின் அவள் கூறியவதனாற் பயனில்லையாம். அதனைக் கலவியிறுதியினும் புலவியினும் கூறப்பெறும் என்றவாறு.

"நின்னணங் குற்றவர் நீ செய்யும்1 கொடுமைகள்
என்னுழை வந்துநொந் துரையாமற்2 பெறுகற்பின்"

(கலித். 77)

எனப் புலவியிற் கூறியவாறு காண்க.

கலவியிறுதியிற் கூறுதல் வந்தவழிக் காண்க.

(39)

(பாடம்) 1. நீ செய்த.

2. என்னுடன் நொந்துவந் துரையாமை.