பொருளியல்

232பொழுது தலைவைத்த1 கையறு காலை
இறந்த போலக் கிளக்குங் கிளவி
மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு
அவைநாற் பொருட்கண் நிகழும் என்ப.

என்-எனின். இது பருவம் வந்துழித் தலைமகட் குரியதோர் வழுக்காத்தலை நுதலிற்று.

பொழுது தலைவைத்த லாவது - யாதானுமொரு பருவத்தைக் குறித்தவழி யப்பருவம் இருதிங்களை யெல்லையாக வுடைத்தாயினும் அது தோற்றியவழி என்றவாறு.

கையறு காலை என்பது - இது கண்டு செயலற்றகாலை என்றவாறு.

இறந்தபோலக் கிளத்த லாவது - அக்காலந் தோன்றிய பொழுது கழிந்தது போலக் கூறுதல்.

மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு அவை நாற் பொருட்கண் நிகழும் என்ப என்பது - அவ்வாறு கூறுதல் அறியாமையானாதல் வருத்தத்தானாதல் மயக்கத்தானாதல் அக் காலத்திற்குரிய பொருள் மிகத் தோன்றுதலானாதல் என இந்நான்கு பொருளானும் நிகழும் என்றவாறு.

சிறுபொழுதாயின் யாமங் கழிவதன் முன்னர்க் கூறுதல். எனவே, இவ்வாறு வருஞ் செய்யுள் காலம் பிழைத்துக் கூறுகின்ற தல்ல, என்றவாறு.

உதாரணம்

"பொருகடல் வண்ணன் புனைமார்பில் தார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்2 பெயல் தாழ
வருது மெனமொழிந்தார் வாரார்கொல் வானம்
கருவிருந்து ஆலிக்கும் போழ்து3."

(கார்நாற். 1)

இது பருவங்கண்டவழி வாரார்கொல் என்றமையால் இறந்த போலக் கிளந்தவாறாயிற்று. பிறவு மன்ன. இதுவுமோர் மரபு வழுவமைத்தல்.

(40)

1. தலைவைத்த மெய்ப்பாடாவன - ஆறாம் அவதியினும் ஒப்பத் தோன்றுதற்குரிய மெய்ப்பாடுகளாகிய மன்றத்திருந்த சான்றோர் அறியத் தன் துணைவன் பெயரும் பெற்றியும் அவனொடு புணர்ந்தமையும் தோன்றக் கூறியும் அழுதும் அரற்றியும் பொழுதொடு புலம்பியும் ஞாயிறு முதலியவற்றொடு கூறத்தகாதன கூறலும் பிறவுமாம். (தொல். பொருள். 236. நச்சி.)

(பாடம்) 2. திருவிலங் கூன்றி றல்தீம்.

3. ஆலி நகும்.