என் - எனின் , களவுக்காலத்துத் தோழிக்குரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று. இரந்து குறையுற்ற தலைமகனைத் தோழி நிரம்ப நீக்கி நிறுத்தலன்றி மெய்ம்மை கூறுதலும் பொய்ம்மை கூறுதலும் நல்வகையுடைய நயத்தினாற் கூறியும் பல்வகையானும் படைத்து மொழிந்து சொல்லவும் பெறும் என்றவாறு. உதாரணம் களவியலுட் காட்டப்பட்டனவுள்ளுங் காண்க. நல்வகையுடைய நயத்திற்குச் செய்யுள்:- "வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே அவையினும் பலவே சிறுகருங் காக்கை அவையினும் அவையினும் பலவே குவிமடல் ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங் குரீஇக் கூட்டுவாழ் சினையே." இது மடலேறுவல் என்ற தலைவனைப் பழித்து அருளுடையீராதலான் மடலேறுவது அரிது என நயத்திற் கூறியது. இதுவுமோர் மரபுவழுவமைத்தவாறு. (41)
1. நீயே சென்று கூறலென்றலும் அறியாள் போறலும் குறிப்பு வேறுகூறலும் பிறவும் நயத்திற் கூறும் பகுதியாற் படைத்தது பலவகையாற் படைத்துத் துறைவகையாம் . (தொல். பொருள். 237. நச்சி.)
|