என் - எனின் , தலைமகற்குந் தலைமகட்கும் உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. உயர்த்துச் சொல்லுதற்குரிய கிளவி தலைமகற்குந் தலைமகட்கும் ஒத்தகிளவி , ஐயக்கிளவி தலைமகற்கே உரித்தென்றவாறு. தலைவிமாட்டு ஐயக்கிளவி யின்றென்றவாறாம், அதனாற் குற்றமென்னையெனின், தெய்வமென்று ஐயுறுங்கால் அதனை முன்பு கண்டறிவாளாதல் வேண்டும் . காணாமையின் ஐயமிலள் என்க. இனி உயர்த்துச் சொல்லுதல் உளவாம். "அவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றனள்". (அகம்.48) என்பது உயர்த்துச் சொல்லியவாறு.தலைவன் உயர்த்துச் சொல்லியதற்குச் செய்யுள்:- "மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி." (குறள்.1118) பிறவு மன்ன. ஐயக்கிளவி களவியலுட் கூறப்பட்டது.(42)
(பாடம்) 1. குரிய.
|