பொருளியல்

237வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல்
தாவின் றுரிய1 தத்தங் கூற்றே.

என் - எனின், வாயில்கட்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

தத்தங் கூறுபாட்டினான் வாயில்கள் கூறுங் கிளவி வெளிப்படக் கிளத்தல் கேடின்றி யுரிய வென்றவாறு.

தத்தங் கூறாவது அவரவர் சொல்லத்தகுங் கூறுபாடு. ஆனுருபு தொக்கு நின்றது. எனவே, வாயில்களல்லாத தலைமகளும் நற்றாயும் மறைத்துச் சொல்லப்பெறுவர் என்றவாறு.

வருகின்ற சூத்திரம் மறைத்துச் சொல்லும் உள்ளுறை சொல்லுகின்றா ராதலின், அவ் வுள்ளுறை வாயில்களை விலக்கியவாறு. இவர் மறைத்ததனாற் குற்ற மென்னை ? இவர் குற்றேவல் முறைமையராதலானும் கேட்போர் பெரியோர் ஆதலானும் வெளிப்படக் கூறாக்காற் பொருள் விளங்காமையானும் அவ்வாறு கூறினால் இவர் கூற்றிற்குப் பயனின்மையானும் வெளிப்படவே கூறும் என்க.

(45)

(பாடம்) 1. `உரிய' என்றதனால் தோழிவாயிலாகச் சென்றுழித்தலைவி வெளிப்படக் கூறுதலுங் கொள்க. (தொல், பொருள், 241. நச்சி.)