என் - எனின் , உள்ளுறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உடனுறையும் உவமமும் சுட்டும் நகையும் சிறப்பும் எனக் கெடலரு மரபினை உடைய உளளுறை ஐந்து வகைப்படும் என்றவாறு. உள்ளுறையாவது பிறிதொரு பொருள் புலப்படுமாறு நிற்பதொன்று. அது கருப்பொருள் பற்றி வருமென்பது அகத்திணையியலுள் (அகத்திணை.50) கூறப்பட்டது. உடனுறையாவது உடனுறைவ தொன்றைச் சொல்ல , அதனாலே பிறிதொரு பொருள் விளங்குவது. "விளையா டாயமொடு வெண்மணல்1 அழுத்தி மறந்தனம் துறந்த காழ் முளை2 யகைய நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப3 நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே4 அம்ம நாணுதும் நும்மொடு நகையே விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த் துறைகெழு கொண்கநீ நல்கின் நிறைபடு நீழற் பிறவுமா ருளவே." (நற்றிணை.172) இதனுள் `புன்னைக்கு நாணுதும் ' எனவே, அவ்வழித் தான் வளர்த்த புன்னையென்றும் , `பல்காலும் அன்னை வருவள் ' என்றுடனுறை கூறி விளக்கியவாறு. பிறவுமன்ன. உவமம் என்பது உவமையைச் சொல்ல உவமிக்கப்படும் பொருள் தோன்றுவது. "வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் குறைபடுந்தேன் வேட்டும் குறுகும் - நிறைமதுச் சேர்ந்து உண்டாடும் தன்முகத்தே செவ்வி உடையதோர் வண்டா மரைப்பிரிந்த வண்டு." (தண்டி. 53 உரை) இது வண்டைக் கூறுவாள் போலத் தலைமகன் பரத்தையிற் பிரிவு கூறுதலின் உள்ளுறையுவமம் ஆயிற்று. சுட்டு என்பது ஒரு பொருளைச் சுட்டிப் பிறிதோர் பொருட்படுதல். "தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண்ட வள்செய் தது." (குறள். 1279) இதனுள் இப் பூப்பறிப்பேமாயின் வளைகழன்று தோள் மெலிய நடத்தல் வல்லையாக வேண்டும் என ஒரு பொருள் சுட்டி தந்தமை காண்க. நகையாவது நகையினாற் பிறிதொரு பொருளுணர நிற்றல். "அசையியற் குண்டாண்டோ ரேஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும்." (குறள்.1098) இதனுள் நகையினாற் பிறிதோர் குறிப்புத் தோன்றியவாறு காண்க. சிறப்பு என்பது இதற்குச் சிறந்தது இஃது எனக் கூறுவதுனானே பிறிதோர் பொருள் கொளக் கிடப்பது. (46)
1. வெண்மரல். 2. காண்முனை. 3. பெய்தனம் வார்த்தது. 4. நலனே.
|