பொருளியல்

239அந்தமில் சிறப்பின் ஆகிய1 இன்பம்
தன்வயின் வருதலும் வகுத்த பண்பே.

என் - எனின். இதுவும் உள்ளுறைப் பாற்படுவதோர் பொருள் உணர்த்துதல் நுதலிற்று.

அந்தமிலாத சிறப்பினாகிய வின்பத்திடத்து உள்ளுறைப் பொருண்மை வருதலும் வகுத்த இயல்பு என்றவாறு.

`அந்தமில் சிறப்பு' என்பது மேன்மேலுஞ் சிறப்புச் செய்தல்.

"நுண்எழில் மாமைச் சுணங்கணி ஆகம்தம்
கண்ணொடு தொடுத்தென நோக்கியும் அமையார்என்
ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர்
எண்ணுவ தெவன்கொ லறியேன் என்னும்".

(கலித். 4)

என்றவழி, இன்பத்தின்கண்ணும் பிறிதோர் பொருள் உண்டென்பது தோற்றுகின்றது.
(47)

(பாடம்) 1. ஆக்கிய.