மெய்ப்பாட்டியல்

2561ஆங்கவை,ஒருபால் ஆக 2வொருபா லாக
உடைமை இன்புறல் நடுவுநிலை யருளல்
தன்மை அடக்கம் வரைதல் அன்பெனாஅக்
கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல்
நாணல் துஞ்ச லரற்றுக் கனவெனாஅ
முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை
கருதல் ஆராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக்
கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை
வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ
அவையும் உளவே அவையலங் கடையே.
என்-னின். மேற்சொல்லப்பட்ட எண்வகைமெய்ப்பாடும் ஒழிய வேறுபட்டுவருவன சில மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்டன ஒருபக்கமாக ஒருபக்கமுடைமை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் உள, அவையல்லாத விடத்து என்றவாறு.

எனவே, ஆமிடத்து இவை யங்கம் ஆகும்.

உடைமையாவது-யாதானு மொருபொருளை உடையனாயினால் வருதலாகும் மனநிகழ்ச்சி.

"நெடுநல் யானையுந் தேரு மாவும்
படையமை மறவரு முடையம் யாமென்
றுறுதுப் பஞ்சாது."

(புறம்.72)

எனவரும்.

இன்புறலாவது-நட்டாராகிப் பிரிந்துவந்தோரைக் கண்ட வழி வருவதோர் மன நிகழ்ச்சி போல்வது.

"கெடுத்துப்படு3 நன்கலம் எடுத்துக் கொண்டாங்கு."

(நற்றிணை.182)

"..............உள்ளிய
வினைமுடித்தன்ன இனியோள்."

(நற்றிணை.3)

"விட்டகன் றுறைந்த நட்டோர்க் கண்ட
நாளினும் இனிய நல்லாள்."

எனக் காம நுகர்ச்சியின்றி வரும் இன்புறுதல்.

நடுவுநிலைமையாவது - ஒருமருங்கு ஓடாது நிகழும் மனநிகழ்ச்சி.

"சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க் கணி."

(குறள்.118)

என வரும்.

அருளாவது-எல்லாவுயிர்க்கும் அளிசெய்தல்.

"அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்."

(கலித்.11)

என்றாற்போல வருவது.

தன்மை யென்பது-சாதியியல்பு.

பார்ப்பார் அரசர் இடையர் குறவர் என்றின்னோர்மாட்டு ஒருவரையொருவர் ஒவ்வாமற் கிடக்கு மியல்பு . அது மெய்க்கடமையின்கண் வேறுபட்டுவருதலின் மெய்ப்பாடாயிற்று.

"வயலைக் கொடியின் வாடிய மருங்குல்4
உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்."

(புறம்.315)

என்றும்.

"புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழில் மார்பின்
மறலி அன்ன களிற்றின்மிசை யோனே."

(புறம்.12)

என்றும்.

"காயாம்பூக் கண்ணிக் கருந்துவ ராடையை
மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோர்
ஆயனை யல்லை."

(கலித்.108)

என்றும்.

"தேனொடு நீடு மயிற்குற மாக்கள்."

என்றும் வரும்.

அடக்கம் என்பது-மனமொழிமெய்யி னடங்குதல். அது பணிந்த மொழியும் தானைமடக்கலும் வாய்புதைத்தலும் போல்வன.

"ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்."

(குறள்.126)

என்றும்,

"யாகாவா ரா யினும் நாகாக்க."

(குறள்.127)

என்றும்,

"நிலையில் திரியா தடங்கியான் தோற்றம்."

(குறள்.124)

என்றும் வருவன. இதுவும் அடங்காமை போலாமையின் மெய்ப்பாடாயிற்று.

வரைவு என்பது-செய்யத் தகுவனவும் தவிரத் தகுவனவும் வரைந்து ஒழுகும் ஒழுக்கம், அது.

"பெண்விழைந்து பின்செலினும் தன்செலவிற் குன்றாமை
கண்விழைந்து கையுறினுங்5 காதல் பொருட்கின்மை."

(திரிகடுகம்.29)

என்றாற்போல வருவன.

அன்பு என்பது-பயின்றார் மாட்டுச் செல்லுங் காதல்.

"புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு."

(குறள்.79)

என்பதனான் அறிக.

கைம்மிகல் என்பது-குற்றமாயினுங் குணமாயினும் அளவின் மிகுதல்.

அது நிலையின் வேறுபடுதலின் மெய்ப்பாடாயிற்று. கையென்பது அளவுகுறித்த தோர் இடைச் சொல்.

"காதல் கைம்மிகல்."

(தொல்,மெய்ப்பாட்டியல் 23)

என்றும்,

"குணனிலனாய்க் குற்றம் பலவாயின்."

(குறள்.868)

என்றும் இவ்வாறு வருவன.

நலிதல் என்பது-பிறரை நெருக்குதல்.

அதன்கண் நிகழும் மனநிகழ்ச்சி நலிதலாயிற்று. இதுவும் மேற் சொல்லப்பட்ட எட்டும் இன்மையின் ஈண்டு ஓதப்பட்டது.

"பகைநலியப் பாசறைவு ளான்."

(நெடுநல், இறுதிவெண்பா)

எனவரும்,பிறவும் அன்ன.

சூழ்ச்சி என்பது-எண்ணம்.

"சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்."

(குறள்.445)
இதுவு மோர் மனநிகழ்ச்சி.

வாழ்த்தல் என்பது-பிறனை வாழ்த்துதல்.

அதுவும் மேற்கூறப்பட்டன போலாமையான் வேறோர் மெய்ப்பாடாக ஓதப்பட்டது.

"வாழியாதன் வாழி" (ஐங்குறு.6) என்றும் ."எங்கோ வாழிய குடுமி" (புறம்.9) என்றும் இவ்வாறு வருவழி . ஆண்டு வரும் மனநிகழ்ச்சி மெய்ப்பாடாம். அஃதேல் வைதலும் மெய்ப்பாடாதல் வேண்டும் எனின் அது வெகுட்சியின் முதிர்வு. இது அன்பின் முதிர்வாகாதோஎனின். அன்பின்றியும் அரசன் முதலாயினாரைச் சான்றோர் வாழ்த்துதலின் அடங்காதென்க.

நாணல் என்பது-தமக்குப் பழிவருவன செய்யாமை.

"பிறர்பழியுந் தம்பழியும் நாணுவார் நாணுக்
குறைபதி என்னு முலகு."

(குறள்.1015)

"நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாதுறவார் நாண் ஆள்பவர்."

(குறள்.1017)

எனவரும்.

துஞ்சல் என்பது-உறக்கம். அதுவும் உறங்காமை போலாமையின் மெய்ப்பாடாயிற்று.

"............முனிவின்றி.
நனந்தலை யுலகமுந்துஞ்சும்."

(குறுந்.6)

எனவரும்.

அரற்று என்பது-உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு.

அதுவும் ஏனைச்சொல்லின் வேறுபடுதலின் அரற்றென ஒரு மெய்ப்பாடாயிற்று முன் உறக்கம் வைத்தலானும் பின் கனவு வைத்தலானும் இப்பொருள் உரைக்கப்பட்டது.

"பாயல்கொண் டென்தோட் கனவுவா ராய்கோல்
தொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்
கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ
விடுமருப்பி யானை விலங்குதேர்க் கோடும்
நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்று
செய்பொருள் முற்று மளவு."

(கலித்.24)

எனவரும்.

இது களவியலின் பாற்படுமெனின் அரற்றென்பது ஒருபொருளைப் பலகாற்கூறுதல்; அஃது அப்பொருண்மேற் காதலாற் கூறுதலின் அதுவுமோர் மெய்ப்பாடாயிற்றெனவுமாம்.

"பொன்னார மார்பிற் புனைகழற்சாற் கிள்ளிபேர்
உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் கென்னோ
மனனொடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப்
புனல்நாடன் பேரே வரும்."

(முத்தொள்.104)

எனவரும் எனபது கொள்க. கனவுநிலை நனவுபோலாமையின் மெய்ப்பாடாயிற்று.

"நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது."

(குறள்.1215)

எனவரும்.

முனிதல் என்பது வெறுத்தல்.

"காலையெழுந்து கடுந்தேர் பண்ணி
வாலிழை மகளிர்த் தரீஇச் சென்ற
மல்லல் ஊரன் மெல்லினன் பெரிதென
மறுவருஞ் சிறுவர் சாயே
தெறுக அம்மஇத் திணைப்பிறத் தல்லே."

(குறுந்.45)

எனக் குடிப்பிறத்தலை வெறுத்தவாறு காண்க.

நினைத்தல் என்பது-கழிந்ததனை நினைத்தல். அது மறந்தாங்கு மறவாது பின்புந்தோற்றுதலின் மெய்ப்பாடாயிற்று.

"நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்பல்
சினைப்பது போன்று கெடும்."

(குறள்.1203)

வெருஉதல் என்பது- அச்சம் போல நீடுநில்லாது கதுமெனத்தோன்றி மாய்வதோர் குறிப்பு. அதனைத் துணுக்கு என்றானென்பது.

"ஒருஉநீ6 எங்கூந்தல் கொள்ளல்யா நின்னை
வெரூஉதுங்7 காணுங் கடை."

(கலித்.87)

என்றவழி அஞ்சத்தகுவது கண்டு அஞ்சுதலின்மையும் அஞ்சினார்க்குள்ள வேறுபாடு அதன் பின் நிகழாமையுங் காண்க.
மடி என்பது- சோம்புதல்.

"மடிமை குடிமைக்கண் தங்கின் தன்ஒன்னார்க்
கடிமை புகுத்தி விடும்."

(குறள்.608)

என்றவழி மடி யென்பதோர் மெய்ப்பாடுண்மை யறிக.

கருதல் என்பது - குறிப்பு.

"குறிக்கொண்டு நோக்காமை அல்லா லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும்."

(குறள்.1095)


என்றவழிக் குறிக்கோள் என்பதோர் மெய்பாடுண்மை யறிக.

ஆராய்ச்சி என்பது-ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மைத்தெனவாராய்தல்.

ஆராய்தல் எனினுந் தெரிதல் எனினுந் தேர்தலெனினும் நாடலெனினும் ஒக்கும்

"நன்மையும் தீமையும் நாடி நலம்புரி."

(குறள்.511)

'ஆயும் அறிவினர்'

(குறள்.918)

'தேரான் பிறனைத் தெளிந்தான்'

(குறள்.508)

எனவும் ஆராய்ந்தலென்பது தோற்றியவாறு காண்க.

விரைவு என்பது- ஒருபொருளைச் செய்ய நினைத்தான் அது தாழ்க்கில் அப்பயன் எய்தான் கடிதின் முடித்தல் வேண்டுமெனக் குறித்த மனநிகழ்ச்சி.

"கன்றமர் கறவை மான
முன்சமத் தொழிந்ததன் தோழற்கு வருமே."

(புறம்.275)

"போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ."

(புறம்.82)

என வரும். பிறவு மன்ன.

உயிர்ப்பு என்பது-முன்புவிடும் அளவினன்றிச் சுவாதம் நீள விடுதல்.

"......பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ள மின்னுந் தன்னுழை யதுவே."

(குறுந்.142)

என வரும்.

கையாரு என்பது-காதலர் பிரிந்தால் வருந் துன்பமும் அந்நிகரனவும் வருவது.

"தொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள்
கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ."

(கலித்.24)

என்றவழிக் கையாறென்பதும் ஓர் மெய்ப்பாடாயிற்று.
இடுக்கண் என்பது - துன்பமுறுதல்.

மேலதனோடு இதனிடை வேறுபாடு என்னையெனின். கையாறு என்பது இன்பம் பெறாமையான் வருந்துன்பம்; இடுக்கணாவது துன்பமாயின வந்துறுதல்.

"அடுக்கி வரினு மழிவிலா னுற்ற
இடுக்கண் இடுக்கட் படும்."

(குறள்.625)

என்றவழி இடுக்கணென்பது வருவதொன்றாகக் கூறியவாறு காண்க.

கையாறென்பது - மனத்தின்கண் நிகழ்வதோர் மெய்ப்பாடு இடுக்கணென்பது- மெய்யானுந் தோற்றுவதோர் மெய்ப்பாடு.

பொச்சாப்பு என்பது - மறத்தல்.

"பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்."

(குறள்.199)

என்பதனாற் பொச்சாப்பு மறத்தலாயிற்று.

பொறாமை என்பது- பிறர்க்கு ஆக்க முதலாயின கண்ட வழியதனைப் பொறாது நடக்கும் மனநிகழ்ச்சி அதனை அழுக்காறு என்ப.

"அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்."

(குறள்.168)

என்றவழி அழுக்காறு என ஒருமெய்ப்பாடு உளதாகியவாறு கண்டு கொள்க.

வியர்த்தல் என்பது- தன்மனத்தின் வெகுட்சி தோன்றிய வழிப் பிறப்பதோர் புழுக்கம்.

"பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்."

(குறள்.487)

இதன் கண் உள்வேர்ப்பர் என்றதனான் மனநிகழ்ச்சி ஆகியவாறு காண்க.

ஐயம் என்பது - ஒருபொருளைக் கண்டவழி யிதுவெனத் துணியாத நிலைமை.

"அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு."

(குறள்.1081)

என்றவழி ஐயம் மனத்தின்கண் நிகழ்ந்தவாறு காண்க.

மிகை என்பது - ஒருவனை நன்குமதியாமை.

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்."

(குறள்.158)

இதனுள் மிகுதி யென்பது நன்குமதியாமையாம்.

நடுக்கம் என்பது - யாதானும் ஒரு பொருளை இழக்கின்றோமென வருமனநிகழ்ச்சி.

"கொடுங்குழாய் துறக்குநர் அல்லர்
நடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே."

(கலித்.13)

எனவரும் , இத்துணையும் கூறப்பட்டன அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவென்று கொள்க.

(12)


1. ஆங்கவை ஒருபாலாக - எள்ளல் முதலாக விளையாட்டிறுதியாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் ஒரு கூறாக; ஒரு பாலென்றது இனிச்சொல்லுகின்ற ஒரு கூறென்றவாறு. பின்னர் அவற்றையெல்லாம் எண்ணி 'இவையுமுளவே அவையலங்கடையே' என்றார். ஈண்டெண்ணப்பட்டவையே ஆண்டடங்குவனவும் உள. அப்பொருண்மைய அல்லாதவிடத்து இவை முப்பத்திரண்டும் ஈண்டு மெய்ப்பாடெனப்படும்.இவை முப்பத்திரண்டெனத் தொகை கூறியதிலனாலெனின், ஆங்கவை ஒரு பாலாக ஒருபால் என்றானாகலின், இருகூறெனப்படுவ தம்மின் ஒத்த எண்ணாதல் வேண்டுமாகலின் அவை முப்பத்திரண்டெனவே இவையும் முப்பத்திரண்டென்பது எண்ணி உணரவைத்தான் என்பது........இவை முப்பத்திரண்டும் மேற்கூறிய முப்பத்திரண்டும் போல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகி நிகழும் மெய்ப்பாடெனக் கொள்க. இவையெல்லாம் உலகவழக்காகலான் இவ்வழக்கேபற்றி நாடகவழக்குள்ளும் கடியப்படா என்றவாறு.(தொல். பொருள். 260. பேரா.)

2.(பாடம்)ஒருபால்.
3.(பாடம்)கெடுத்தெடீய
4. மருங்கின்.
5. கண்வீழ்ந்து கையறினும்.
6.(பாடம்)ஒருவுநீ.
7.வெருவுதூஉங்