இதுவும், கைக்கிளை பெருந்திணைக்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஏவல் மரபின் ஏனோரும் உரியர்- (மேற்சொல்லப்பட்ட அடியோரும் வினைவலரும்) ஏவுதல் மரபையுடைய ஏனையோரும் (கைக்கிளை பெருந்திணைக்கு)உரியர்; அவரும் ஆகிய நிலைமை அன்னர் - அவரும் உரியராகிய நிலைமை அத்தன்மைய ராகலான். அவருமாகிய நிலைமை என மொழிமாற்றுக. கைக்கிளை பெருந்திணை என்பது அதிகாரத்தான் வந்தது. இதனாற் சொல்லியது தலைமக்களும் கைக்கிளை பெருந்திணைக்கு உரியராவர் என்பதாம்.உரியராயினவாறு அறம் பொருள் இன்பங்கள் வழுவ மகளிரைக் காதலித்தலான் என்றவாறாயிற்று. | ஏஎ இஃதொத்தான் நாணிலன் தன்னொடு மேவேமென் பாரையு மேவினன் கைப்பற்றும் மேவினு மேவாக் கடையும் அஃதெல்லா நீயறிதி யானஃ தறிகல்லேன் பூவமன்ற மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான் புல்லினி தாகலிற் புல்லினேன் எல்லா தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று; | சுடர்த்தொடீ, | போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள் வேட்டார்க் கினிதாயின் அல்லது நீர்க்கினிதென் றுண்பவோ நீருண் பவர்; செய்வ தறிகல்லேன் யாதுசெய் வேன்கொலோ ஐவாய் அரவின் இடைப்பட்டு நைவாராம் மையின் மதியின் விளங்கு முகத்தாரை வௌவிக் கொளலும் அறனெனக் கண்டன்று; அறனு மதுகண்டற் றாயிற் றிறனின்றிக் கூறுஞ்சொற் கேளான் நலிதரும் பண்டுநாம் வேறல்ல மென்பதொன் றுண்டால் அவனொடு மாறுண்டோ நெஞ்சே நமக்கு." | (கலி.குறிஞ்.26) இதனுள் வௌவிக் கொளலும் அறனெனக் கண்டன்று எனவும் நீர்க்கினிதென் றுண்பவோ நீருண்பவர்"எனவும் தலைமகன் கூறுதலானும் தலைமகள் முன் இழித்துரைத்தலானும், ஊடியுணர்வாள் போல உடன்பட்டமையானும், இஃது உயர்ந்தோர்மாட்டு வந்த கைக்கிளை பெருந்திணை வந்தவழிக் கண்டுகொள்க. (26)
1. "ஏனோரும் - நால்வகை வருணமென்று எண்ணியவகையினால் ஒழிந்துநின்ற வேளாளரும்" (நச்சி.)
|