அகத்திணை இயல்

28ஓதல் பகையே தூதிவை பிரிவே.

மேல் கைக்கிளை முதலாக எழுதிணையு முணர்த்தினார், அவற்றுள் நிலம் பகுக்கப்பட்ட முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்னும் நான்கு திணையும் களவு கற்பு என்னும் இருவகை கைக்கோளினும் நிகழ்தலின் அவற்றை யொழித்து நிலம் பகுக்கப்படாத கைக்கிளை பெருந்திணையும் பாலையும் இவ்வோத்தினுள் உணர்த்துகின்றனராதலின் அவற்றுள் பாலைக் குரித்தாகிய பிரிவு உணர்த்துவான் பிரிவுக்கு நிமித்தம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஓதல் பகை தூது இவை பிரிவு - ஓதலும் பகையும் தூதும் என்று சொல்லப்பட்ட இத் தன்மைய பிரிவிற்கு நிமித்தமாம்.

'இவை' என்பது இத்தன்மைய என்னும் பொருள்பட நின்றது. நிமித்தம் என்பது உய்த்துணர்த்து கொள்ளக் கிடந்தது. ஓதற்குப் பிரிதலாவது, தமது நாட்டகத்து வழங்காது பிறநாட்டகத்து வழங்கும் நூல் உளவன்றே, அவற்றினைக் கற்றல் வேண்டிப் பிரிதல். பகைவயிற் பிரிதலாவது, மாற்றுவேந்தரொடு போர் கருதிப் பிரிதல். தூதிற்குப் பிரிதலாவது. இருபெரு வேந்தரைச் சந்துசெய்தற் பொருட்டுப் பிரிதல்.[முதல் ஏகாரம் அசைநிலை; இரண்டாம் ஏகாரம் ஈற்றசை.]

(27)