இது, பகைவயிற் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) தானே சேறலும் - (பகைவர் காரணமாகி அரசன்) தானே சேறலும், தன்னொடு சிவணி ஏனோர் சேறலும் - அவனொடு கூடி ஒழிந்தோர் சேறலும், வேந்தன் மேற்று - வேந்தன் கண்ணது. பகை யென்றது மேனின்ற அதிகாரத்தான் உய்த்துணர்ந்து கொள்ளக்கிடந்தது. 'தானே' என்பதன் ஏகாரம் பிரிநிலை; படையை யொழிய என்றவாறு. போரைக் குறித்துப் பிரிதலும் அரசர்க்கு உரித்தென்று கொள்க. இதனுள் அரசன் தலைமகனாயுழிப் பகைதணிவினைப் பிரிவு எனவும், அவனொடு சிவணி ஏனோர் தலைவராயுழி வேந்தற்குற்றுழிப் பிரிவு எனவும் இதனை இரு வகையாகக் கொள்க. [ஏகாரம் ஈற்றசை.] (29)
1. சிவணிய.
|