என் - னின். இதுவுமோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. பெருக்கவுஞ் சிறுக்கவுங் கூறுதல் மெய்ப்பாட்டின்வழிப் பக்கம் புலப்படத்தோன்றும் என்றவாறு. எனவே, மெய்ப்பாடு தோற்றாதவழி இப்புணர்ப் பினாற் பயனின்றாம். "அவாப்போல் அகன்றதன் அல்குன்மேற் சான்றோர். உசா அப்போல உண்டேமருங்குல்." என்பது பெருமையுஞ் சிறுமையும்பற்றி உவகை நிகழ்ந்தது."கலங்கவிழ்த்த நாய்கன் போற் களைதுணைப் பிறிதின்றி". (யா. வி. ப. 318) என்பது துன்பப்பெருக்கம் சொல்லி யவலம் வந்தது."பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல வருஞ்செல்லும் பேரும்என் நெஞ்சு." (முத்தொள். 88) இது பெருக்கம்பற்றி இழிவரல் வந்தது. பிறவுமன்ன.
|