உவமையியல்

291உவமப் பொருளின் உற்ற துணருந்
தெளிமருங் குளவே திறத்திய லான.1
என் - னின். இதுவும் உவமைக்குரிய வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று.

உவமப்பொருளாலே சொல்லுவான் குறிக்கப்பட்ட பொருளை யுணருந் தெளியும் பக்கமும் உள கூறுபாட்டியலான் என்றவாறு.

தெளிமருங்காவது துணிவுபக்கம். எனவே துணியாமை உவமத்தின் கண்ணே வந்தது.அவ்வாறு வரினும் இதுவேயெனத் துணிதலின் துணிபக்கமாவது.

"ஐதேய்ந் தன்று பிறையு மன்று
மைதீர்ந் தன்று மதியு மன்று
வேயமன் றன்று மலையு மன்று
பூவமன் றன்று கனையு மன்று
மெல்ல வியலும் மயிலு மன்று
சொல்லத் தளருங் கிளியு மன்று."

(கலித். 55)

என்றவழித் துணியாது நின்றன நுதலும் முகனும் தோளுங் கண்ணும் சாயலும் மொழியு மெனத் துணிந்தவாறு கண்டுகொள்க.

இன்னும் இதனானே.

"கயலெழுதி வில்லெழுதிக்காரெழுதிக் காமன்
செயலெழுதித் தீர்ந்த முகந் திங்களோ காணீர்."

(சிலப் கானல்.11)

என்றவழிக் கண் புருவங் கூந்தலை யுவமப்பெயரான் வழங்குதலுங் கொள்க.

(20)


1.'திறத்தியலான' எனப்பட்ட பகுதியாவன, மேற்கூறப்பட்ட மெய்ப்பாடு எட்டும் பற்றி உவமம் கொள்ளுங்கால், உற்றதுணரும் தெளிம ருங்கென உவமான அடைக்கு உவமேய அடை குறைந்து வருவனவும் யாதும் அடையின்றி வருவனவும் என்று இவ்விரண்டும் உற்றுணராமல் சொல்லிய வழி, அவற்றுக்கும் உவமைப்பொருளே தெளிமருங்காம் எனவும் வாளாதே உவமஞ்செய்து உற்றுணர்த்தாதவழியும். அதுவே தெளிமருங்காம் எனவும் இன்னோரன்ன கொள்க. (தொல், பொருள்.295. பேரா.)