என் - னின். இதுவுமோர் உவமைவிகற்பங் கூறுதல்நுதலிற்று. உவமையைப் போன்று வருவன ஐந்தென்று சொல்லுவர் என்றவாறு. அவையாவன இதற்குவமையில்லை எனவும். இதற்கிதுதானேயுவமை எனவும். பலபொருளினு முளதாகிய வுறுப்புக்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டு சேர்த்தின் இதற்குவமையாம் எனவும், பலபொருளினுமுளதாகிய கவின் ஓரிடத்துவரின் இதற்குவமையாம் எனவும், கூடாப்பொருளோடு உவமித்து வருவனவும். உதாரணம் "நின்னோர் அன்னோர் பிறரிவர் இன்மையின் மின்னெயில் முகவைக்கு வந்திசிற் பெரும." (புறம். 973) என்றும்."மன்னுயிர் முதல்வனை யாதலின் நின்னோர் அனையைநின் புகழொடு பொலிந்தே." (பரிபா. 1) என்றும்."நல்லார்கள் நல்ல வுறுப்பாயின தாங்கள் நாங்கள் எல்லா முடனாதுமென் றன்ன வியைந்த வீட்டாற் சொல்வாய் முகங்கண் முலை தோளிடை யல்குல் கைகால் பல்வார் குழலென் றிவற்றாற்படிச் சந்த மானாள்." என்றும்,"நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் வந்தொருங்கு புணர்ந்த விளக்கத் தனையை" (பதிற்றுப். 14) என்றும்,வாரா தமைவானோ வாரா தமைவானோ வாரா தமைகுவன் அல்லன் மலைநாடன் ஈரத்து ளின்னவை தோன்றின் நிழற்கயத்து நீருட் குவளைவெந் தற்று (கலித். 41) என்றும் வரும்.(24)
|