உவமையியல்

301இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்
உவம மருங்கில்1 தோன்றும் என்ப.
என் - னின். இது தலைவற்குந் தலைவிக்குந் தோழிக்கு முரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

மகிழ்ச்சி பயக்குங் கூற்றும் புலவிபயக்குங் கூற்றும் உவமப்பக்கத்தால் தோன்றும் என்றவாறு.

" மாரி யாம்பல் அன்ன கொக்கின்
பார்வ லஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு
கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர்
கயிறிரி யெருத்திற் கதம்பூந் துறைவ. "2

(குறுந் 117)

என்றது தலைமகள் உவமை கூறியவழி நின்ற பெண்டிர் தடுப்பக் கயிறிரி யெருதுபோலப் போந்தனை யெனத் துனியுறு கிளவி வந்தது.

"..... ..... வானத்
தணங்கருங் கடவு ளன்னோள்நின்
மகன்தா யாதல் புரைவதால் எனவே. "

(அகம். 16)

என மகிழ்ச்சிபற்றி வந்தது. பிறவும் அன்ன.

(30)


1.' மருங்கு ' என்னும் மிகையானே ஏனையுவமத்தின் கண்ணும் இப்பகுதி கொள்ளப்படும்; அவை,

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே. " (குறுந். 71) (தொல். பொருள். 303. பேரா.)

2. (பாடம்) கயிறரி எருத்தின் கதழுந் துறைவன்.