செய்யுளியல்

313 இருவகை உகரமோ1 டியைந்தவை வரினே
நேர்பு நிரைபும் ஆகும் என்ப
குறிலிணை உகரம் அல்வழி யான.

இதுவுமது.

மேற்சொல்லப்பட்ட இரண்டசையுங் குற்றியலுகரமுமல்லாத முற்றியலுகரமும் பொருந்திவரின், நேர்பசையு நிரைபசையு மெனப்பெயராகும்;அவ்வழிக் குற்றெழுத்தொடு பொருந்தின உகரமல்லாத விடத்தென்றவாறு.

காது, காற்று, கன்று; காவு, சார்வு, கல்லு என்பன நேர்பசை, வரகு, அரக்கு, மலாடு, பனாட்டு, கதவு, புணர்வு, உருமு, வினாவு என்பன நிரைபசை, தொகுத்து நோக்குழி நேர், நிரை, நேர்பு, நிரைபு என்பன தாமே யுதாரணமாம். அஃதேல் நேர்பசை நிரைபசையெனக் காக்கை பாடினியார் முதலாகிய ஒருசாராசிரியர் கொண்டிலரா லெனின். அவர் அதனை யிரண்டசையாக்கி யுரைத்தாராயினும் அதனை முடிய நிறுத்தராது. வெண்பா வீற்றின்கண் வந்த குற்றுகரநேரீற்றியற் சீரைத்தேமா புளிமா என்னும் உதாரணத்தான் ஓசையூட்டிற் செப்பலோசை குன்றுமென்றஞ்சி, காசு பிறப்பென உகரவீற்றானு தாரணங்காட்டினமையானும், சீருந்தளையுங் கெடுவழிக் குற்றியலுகரம் அலகுபெறாதென்றமையானும், வெண்பா வீற்றினு முற்றுகரமுஞ் சிறுபான்மை வருமென உடன்பட்டமையானும், நேர்பசை நிரைபசை யென்று வருதல் வலியுடைத்தென்று கொள்க.அவை செய்யுளீற்றின்கண் வருமாறு:

'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்.'

(குறள். 10)

'வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்
கியாண்டும் இடும்பை இல.'

(குறள். 4)

'இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.'

(குறள். 5)

'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.'

(குறள். 7)

எனவரும். பிறவு மன்ன.

அலகிடுங்கால் நேரசை ஓரலகு; நிரையசை யிரண்டலகு; நேர்பசை மூன்றலகு; நிரைபசை நான்கலகு பெறும்.

(4)

1. உகர ஈறல்லாத தேமா என்பதனான் முடியா என்பர். அதனாலும் குற்றுகரத்தின் செய்கை முற்றுகரத்திற்கும் வேண்டி, நேர்பு நிரைபு கொண்டான் என்பது. அற்றன்றியும் குற்றுகரம் சார்ந்து தோன்றுமாறு போல இம் முற்றுகரமும் வருமொழி காரணமாக நிலைமொழி சார்ந்து தோன்றுதல் ஒப்புமை நோக்கியும் அதனைக் குற்றுகரம் போல ஒரசைக்கு உறுப்பாம் என்றான் என்பது.(தொல்.பொருள்.316.பேரா)