செய்யுளியல்

317 முற்றிய லுகரமும் மொழிசிதைத்துக் கொளாஅ
நிற்றல் இன்றே ஈற்றடி மருங்கினும்.

என்-னின்.முற்றியலுகரத்திற் குரிய வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று.

முற்றியலுகரமு மொழிசிதைந்து நேர்பசை நிரைபசை யென்றுரைக்கப் படாது;அஃது ஈற்றடி மருங்கிற்றனியசையாகி நிற்றலும் இன்றென்றவாறு.

எனவே அடியின திடைக்கண் ஒற்றுமைப்பட்ட சொல்லின்கண் நேர்பசை.நிரைபசையெனக் காட்டப்படாது.அது ஈற்றடி மருங்கிற்றனியசையாகி நில்லா வென்பதூஉம். ஒற்றுமைப்படாத சொல்லின்கண் தனியசையாமென்பதூஉம்.ஈற்றடிக்கண் எவ்வழியானுந் தனியசை யாகாதென்பதூஉம் உணர்த்தியவாறாம்.

"அங்கண் மதியம் அரவுவாய்ப் பட்டென."

(அகத்திணை.பக்.2)

என்றவழி அரவென்பது மொழிசிதையாமையின் நிரைபசை யாயிற்று.

"பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்." (நாலடி.200) என்றவழி பெரு முன்னர்க் குறித்துச் சீராக்க வேண்டுமாயின் ஈண்டு மொழிசிதைத்தலின் நிரைபசை யாகாதாயிற்று.

"இனமலர்க் கோதாய் இலங்குநீர்ச் சேர்ப்பன்
புணைமலர்த் தாரகலம் புல்லு.

(யாப்.வி.பக்.209)

மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும்
அஞ்சொன் மடவாட் கருளு."

(யாப்.வி.பக்.219)

என்பதனாற் கொள்ளற்க. இவை புல்லு அருளு எனவருமாலெனின்; "நிற்றலின்றே யீற்றடிமருங்கினும்" என்பதனான் ஈற்றடியிறுதியினு மிடையடியிறுதியினு முற்றியலுகரம்.நில்லாதெனவும் பொருளாம்இதனானே அவ்வாறு வருதலுங் கொள்க. முற்றியலுகரமு மென்ற வும்மை இறந்தது தழீஇய எச்சுவும்மை.