செய்யுளியல்

319அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்தி
வகுத்தனர்1 உணர்த்தல்2 வல்லோர் ஆறே.

என்-னின். வகையுளி யுணர்த்துதல் நுதலிற்று.

அசையையுஞ் சீரையும் ஓசையோடு சேர்த்திப் பாகுபாடுணர்த்தல் வல்லோர்கள் நெறி யென்றவாறு.

அஃதாவது பொருளொடு சொல்லை யறுத்தவழித் தளையுஞ் சீருஞ்சிதையின் அவ்வழி ஓசையை நோக்கி அதன்வழிச் சேர்த்துக என்றவாறு.

அது வருமாறு;

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்."

(குறள். 3)

என்றவழி வாழ்வாரெனப் பொருணோக்கிச் சீராமாயின் ஓசைகெடும்.அதன்கண் 'வாழ்' என்பதனை முதனின்ற சீரோடொட்டக் கெடாதாம்.பிறவு மன்ன.

இத்துணையுங் கூறப்பட்டது அசைவகை.

(9)


1. 'வகுத்தனர் உணர்த்தல்' என்றமையின் இனி, வெண்பாவினுள்' வெண்சீர் ஒன்றிவந்த வழியும் வேற்றுத்தளை விரவும் இடனுடைய அவையும் இசையொடு சேர்த்தி வேறுபாடுணர்த்துக.(தொல்.பொருள்.383.பேரா.)

2. (பாடம்)உணர்த்தலும்.