செய்யுளியல்

320 ஈரசை கொண்டு மூவசை புணர்த்துஞ்
1சீரியைந் திற்றது சீரெனப் படுமே.

என்-னின். நிறுத்த முறையானே சீராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இரண்டசைகொண்டு புணர்த்தும்,மூன்றசை கொண்டு புணர்த்தும், ஓசை பொருந்தி யிற்றது சீரெனப்படும் என்றவாறு.

"தாமரை புரையுங் காமர் சேவடி."

(குறுந்.கடவுள் வாழ்த்து)

என்றவழி நான்குசொல்லாகி ஓசை யற்றுநின்றவாறு கண்டு கொள்க.

"எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

(குறள். 110)

என்றவழி மூன்றசையினாற் சீராகியவாறும் அவ்வளவினான் ஓசையற்று நின்றவாறுங் கண்டுகொள்க.

(10)

1. ஒருசீர் பலசொல் தொடர்ந்து வரினும் அவை ஒன்றுபட நிற்றல் வேண்டும் என்றவாறாம்; எனவே உலகத்துச் சொல்லெல்லாம் ஈரசையானும் மூவசையானு மன்றிவாரா என்பது பெற்றாம்.இதனானே ஒரு சொல்லைப் பகுத்துச் சீர்க்கு வேண்டு மாற்றான் வேறு சீராக்கிய வழியும் அச்சீர் வகையானே வேறு சொல்லிலக்கணம் பெறும் என்பதும் கொள்க. ஈண்டு எனப்படும் என்பதே பற்றி நாலசைச்சீர் கொண்டாரும் உளர். ஐயசைச்சீர் கொண்டாரைக் கண்டிலம் என்க.(தொல்.பொருள்.323.பேரா.)