என்-னின். ஈரசைச்சீர் பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட அசைகளில் இயலசை மயங்கிவந்தன இயற்சீர் எனப்படும் உரியசை மயங்கி வந்தன. ஆசிரியவுரிச்சீ ரெனப்படும் என்றவாறு. மயங்குதலாவது ஒருங்குவருதல். நேர் நிரை நேர்பு நிரைபு; என்னும் நான்கினையுந் தம்மினுறழப் பதினாறு அசைச்சீராம்.அவற்றுள் இயலசையாகிய நேரும் நிரையுந் தம்மின் உறழ நான்கு சீராம்.அவை இயற்சீர் எனப்படும். உதாரணம்"தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்." எனவரும்.இனி உரியசையாகிய நேர்பு நிரைபு மென்றவற்றைத் தம்மினுறழ நான்குசீராம். அவை ஆசிரிய உரிச்சீர் எனப்படும். உதாரணம்"ஆற்றுநோக்கு, ஆற்றுவரவு, வரகுசோறு, வரகுதவிடு." எனவரும்.(11)
|