அகத்திணை இயல்

34வேந்துவினை இயற்கை வேந்தன்1 ஒரீஇய
ஏனோர்2 மருங்கினும் எய்திடன் உடைத்தே.

இது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் உரியதோர் பிரிவு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) வேந்து வினை இயற்கை - வேந்தனது வினை இயற்கையாகிய தூது, வேந்தன் ஒரீஇய ஏனோர் மருங்கினும் - வேந்தனை ஒழிந்த வணிகர்க்கும் வேளாளர்க்கும், எய்து இடன் உடைத்து - ஆகுமிடன் உடைத்து.

வேந்தனது வினை - வேந்தற்குரிய வினை. ' இடனுடைத்து ' என்றதனான் அவர் தூதாங்காலம் அமைச்சராகிய வழியே நிகழும் என்று கொள்க. [ஏகாரம் ஈற்றசை.]

(34)

(பாடம்) 1. வேந்தனின்.

2. ஏனோர் - குறுநில மன்னர்.

(நச்சி.)