செய்யுளியல்

351உயிரில்1 லெழுத்தும் எண்ணப் படாஅ
உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான.

என்-னின். மேற்சொல்லப்பட்ட அடிக்குரிய எழுத்து வரையறை உணர்த்துதல் நுதலிற்று.

உயிரில்லாத எழுத்தும் எண்ணப்படா, உயிர் போல இயக்கமின்மையான் என்றவாறு.

உம்மை எச்சவும்மை யாதலாற் குறுகிய வுயிர்த்தாகிய குற்றியலிகரமும் முற்றியலுகரமும் எண்ணப்படா என்று கொள்க. எனவே எண்ணப்படுவன உயிரும் உயிர்மெய்யுமாகி ஒரு மாத்திரையிற் குறையாதன என்று கொள்ளப்படும்.

(41)

1. சிறிது நாப்புடை பெயருந்துணையான் ஒலித்தலும் மொழிசார்ந்து ஒலித்தலும் உடைய அன்றே. அங்ஙனம் ஒருவாற்றான் உயிர்க்கும் திறம் உடைய வாயினும் அவ்வுயிர்க்கும்திறம் ஈண்டுச் செய்யுட்பாற்படுங்கால் உபகாரப்பட இயங்குமாறில வாகலின் எண்ணப்படா. (தொல்.பொருள்.356.பேரா).