செய்யுளியல்

3561சீர்கூன் ஆதல் நேரடிக் குரித்தே.

என்-னின். இதுவுங் கூனாகுமிடன் உணர்த்துதல் நுதலிற்று.

சீர்முழுதுங் கூனாகிவருதல் அளவடிக் குரித்து என்றவாறு.

நேரடி என்றதனான் வெண்பாவினும் ஆசிரியத்தினுங் கலியினுங் கொள்ளப் படும்.

அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே.

(குறுந். 216)
இது ஆசிரியத்திற் கூன்.

"உதுக்காண் சுரந்தானா வண்மைச் சுவர்னமாப் பூதன்
பரந்தானாப் பல்புகழ் பாடி இரந்தான்மாட்
டின்மை அகல்வது போல இருள்நீங்க
மன்னும் அளிதேர் மழை."

(யாப்.வி. பக். 356)
இது வெண்பாவிற் கூன்.

"நீயே, வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப்
புனைமாண் வரீஇய அம்பு தெரிதியே."

(கலித். 7)

இது கலிப்பாவிற் கூன்.
(46)

1. மூன்றுபாலினும் அளவடிக்கண் சீர்கூன் ஆயினவாறு என்றார்க்கு, நேர்பசை நிரைபசைகளையும் சீர்நிலைப்பெறும் என்றான் ஆகலின் அவற்றையும்... கொள்வல் எனின், அசைச் சீரினை வாளாது சீர்என்னான் என்பது. (தொல், பொருள். 341. பேரா.)