செய்யுளியல்

357ஐவகை அடியும் விரிக்குங் காலை
மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்தும்1
எழுபது வகையின்2 வழுவில வாகி
அறுநூற் றிருபத் தைந்தா கும்மே.

என்-னின்.மேற் சொல்லப்பட்ட அடிக்கெல்லாம் விரியுணர்த்துதல் நுதலிற்று.

ஐவகை அடியும் விரிக்குங் காலை என்பது - நாற் சீரடியை எழுத்தளவுபற்றி வகுக்கப்பட்ட குறளடிமுதலாகிய ஐந்தடியினையும் விரித்துணர்த்துங் காலத்து என்றவாறு.

மெய் என்பது-உடம்பு அஃதாவது அசையுஞ் சீரும் தோற்றுதற் கிடமாகிய எழுத்து.

மெய்வகையமைந்த பதினேழ் நிலத்தும் என்பது-எழுத்து அமைந்த நாலெழுத்து முதலாக இருபதெழுத் தீறாகச் சொல்லப்பட்ட பதினேழ் நிலத்தும் என்றவாறு.

எழுபது வகையின் வழவிலவாகி என்பது - எழுபது வகைப்பட்ட உழற்சியின் வழவுதலின்றி என்றவாறு.

எழுபது வகையாவது-இரண்டுசீர் தம்முட் புணரும் புணர்ச்சி எழுபது வகையாம் என்றவாறு.

மேற்சொல்லப்பட்ட எண்பத்துநான்கு சீரினும் (தொல். பொரு. செய்யுளியல் 30, உரை)

இயற்சீரான் வருவதனை இயற்சீரடி எனவும் , ஆசிரியவுரிச்சீரான் வருவதனை ஆசிரியவுரிச்சீரடி எனவும்; இயற்சீர் விகற்பித்து வருவதனை இயற்சீர் வெள்ளடி எனவும் , வெண்சீரான் வருவதனை வெண்சீரடி3 எனவும், நிரையீற்று வஞ்சிச்சீரான் வருவதனை நிரையீற்று வஞ்சியடி எனவும், உரியசையீற்றான் வருவதனை உரியசையீற்று வஞ்சியடி எனவும், ஓரசைச்சீரான் வருவதனை அசைச்சீரடி எனவும் வழங்கப்படும்.

அவற்றுள் , இயற்சீரடி நேரீற் றியற்சீரடி எனவும் நிரையீற் றியற் சீரடி எனவும் இருவகைப்படும். நேரீற் றியற்சீரடியாவது 4நேரீறு நேர் முதலாகிய இயற்சீர் வருதலும் 5நேர்புமுத லாசிரிய வுரிச்சீர் வருதலும் நேர்முதல் வெண்பா வுரிச்சீர் வருதலும் நேர்முதல் வஞ்சியுரிச்சீர் வருதலும் நேர்முதல் ஓரசைச்சீர் வருதலும் என ஐந்துவகைப்படும் .நிரையீற்றியற்சீரும் இவ்வாறு6 நிரைமுதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும்.

ஆசிரியவுரிச்சீரடியும் இருவகைப்படும் நேர்பு ஈறும் நிரைபு ஈறும் என. அவற்றுள், நேர்பீற்றுச் சீரை நேர்புநேரு முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்துவகைப்படும். நிரைபீற்றுச்சீரும் அவ்வாறே நிரைபுநிரையு முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்துவகைப்படும்.

இயற்சீர் வெள்ளடியும் நேரீறும் நிரையீறும் என இருவகைப்படும் . அவற்றுள், நேரீறு நிரைபுநிரையு முதலாகிய ஐந்துசீரொடும் உறழ வகையாம். நிரையீறும் அவ்வாறே நேர்புநேரு முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐவகையாம்.

வெண்சீர் நேர்முதலோடு உறழ்தலும் நிரை முதலோடு உறழ்தலுமென இருவகைப்படும் . அவற்றுள், நேர்பு நேருமுதலாகிய சீர்களொடு உறழ்தல் ஐந்து வகைப்படும் .நிரைபு நிரையுமுதலாகிய சீர்களொடு உறழ்தலும் ஐந்து வகைப்படும்.

நிரையீற்று வஞ்சியுரிச்சீர் முதலசையோ டொன்றுவனவும் ஒன்றாதனவும் என இருவகைப்படும். அவற்றுள், ஒன்றி வருவது நிரைபு நிரையு முதலாகிய சீரொடு உறழ ஐந்து வகைப்படும். ஒன்றாதது நேர்புநேரு முதலிய சீரொடு உறழ ஐவகைப்படும்.

உரியசையீற்று வஞ்சியடியும் அவ்வாறே உறழப் பத்து வகைப்படும்.

அசைச்சீரடியும் அவ்வாறே இருவகையாக்கி உறழப் பத்துவகைப்படும்.

இவ்வகையால் தளை ஏழு பாகுபட்டன; இவை நேரொன் றாசிரியத்தளை, நிரையொன் றாசிரியத்தளை , இயற்சீர் வெண்டளை, வெண்சீர்வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என ஏழுவகையாம், அவ்வழி ஓரசைச்சீர் இயற்சீர்ப்பாற்படும் ஆசிரியவுரிச்சீரு மதுவேயாம் மூவசைச்சீருள் 7வெண்பாவுரிச்சீ ரொழிந்தனவெல்லாம் வஞ்சியுரிச்சீராம், அவ்வழி இயற்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையொடு நேராய் ஒன்றுவது நேரொன் றாசிரியத்தளையாம்; நிரையாய் ஒன்றுவது நிரையொன் றாசிரியத்தளையாம்; மாறுபட்டு வருவது இயற்சீர் வெண்டளையாம்; வெண்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது வெண்சீர் வெண்டளையாம் ; நிரையா யொன்றிற் கலித்தளையாம் . 8வஞ்சியுரிச்சீர் நிற்ப வருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவது ஒன்றிய வஞ்சித்தளையாம் ; ஒன்றாதது ஒன்றா வஞ்சித்தளையாம் . இவ்வகையால் தளை ஏழாயின . இவ்வாறாகி வருதல் வருகின்ற சூத்திரங்களா னுணர்க.

இனி அடி அறுநூற்றிருபத்தைந்தாமாறு ;அசைச்சீர் இயற்சீர் ஆசிரியவுரிச்சீர். வெண்சீர் வஞ்சியுரிச்சீர் என்னும் ஐந்தினையும் நிறுத்தி 9இவ்வைந்துசீரும் வருஞ்சீராகவுறழும்வழி இருபத்தைந்து விகற்பமாம். அவ்விருபத்தைந்தின் கண்ணும் மூன்றாவது ஐந்துசீரையும் உறழ நூற்றிருபத்தைந்து விகற்பமாகும். அந்நூற்றிருபத்தைந்தின் கண்ணும் நான்காவது ஐந்துசீரையும் உறழ அறுநூற்றிருபத்தைந்தாம்10 என்றவாறு.

(46)

1. நிலத்த:நிலத்தின்.

2. வகைமையின்.

3. வெண்சீர் வெள்ளடி

4. நேரியற்சீர் முதலாகிய

5.நேர்முத

6. இவற்றால்.

7. வெண்பாவுரிச்சீரு மதுவேயாம் .மூவசைச்சீருள் வெண்பாவுரிச் சீரொழிந்தன வெல்லாம் வஞ்சியுரிச்சீராம்.

8. வஞ்சியுரிச்சீரீற்றசை.

9. இவ்வைந்தினையும் வஞ்சியுரிச்சீராக.

10. என்றவாறு....சீரடிவேறுபாடென்று கொள்க.