செய்யுளியல்

358ஆங்ஙனம்1 , 2 விரிப்பின் அளவிறந் தனவே
பாங்குற உணர்ந்தோர் பன்னுங் காலை.

என்-னின் .அடி விரியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஈண்டுறழ்ந்த முறையானே அஞ்சடி முதலாக மேன்மேலும் உறழ வரம்பிலவாம் என்றவாறு.

அஃதாவது அறுநூற்றிருபத்தைந்தினோடும் ஐந்தாவது வரும் ஐஞ்சீரையும் உறழ மூவாயிரத்தொருநூற் றிருபத்தைந்து விகற்பமாம். அதன் கண் ஆறாவது இவ்வகை யைந்துசீரையும் உறழப் பதினையாயிரத்து அறுநூற்றிருபத்தைந்து விகற்பமாம். அதன்கண் ஏழாவது வரும் சீரைந்தினையும் உறழ எழுபத்தெண்ணாயிரத்தொரு நூற்றிருபத்தைந்து விகற்பமாம். இவ்வகையினா னுறழ வரம்பிலவாய்விரியும். அன்றியும்,3 இச் சொல்லப்பட்ட அடியினை4 அசையானும் எழுத்தானும் விரிக்க வரம்பிலவாம்.5

(47)

1. அளவிறந்தன - எண்ணிறந்தன. அஃது இலக்கணங் கூறுமாறன் றென்றவாறு , அஃதெற்றாற் பெறுதும் எனின் முதல்நூல் செய்த ஆசிரியன் அகத்தியனார் சொல்லுமாற்றால் பெறுதும் என்றவாறு....இதன் முதனூல் செய்த ஆசிரியனால் செய்யப்பட்ட யாழ்நூலுள்ளும் சாதியும் உவமத்துருபும் திருவிரி இசையும் எனக்கூறப்பட்ட கட்டளைப்பாட்டுச் சிறப்புடையன சாதிப்பாட்டுக்களே. (தொல், பொருள். 363. பேரா.)

2. ஆங்கனம்.
3. அன்றி
4. அடிவகையானும் எழுத்தானும்
5. வரம்பிலவாகும் எனவுமாம்.