செய்யுளியல்

359ஐவகை அடியும் ஆசிரியக் குரிய.

என்-னின். ஆசிரியப்பா நாற்சீரான் வரும் என்பதூஉம் அதன்கண் விரிக்கப்பட்ட ஐவகையடியும் உரித்தென்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று.

நாற்சீரடிக்கண் வகுக்கப்பட்ட ஐவகையடியும் ஆசிரியப்பாவிற் குரிய என்றவாறு.

ஐவகை யடியு முரியவென, அவற்றிற்கு முதலாகிய நாற்சீரடியும் உரித்தாயிற்று.

உதாரணம்

"தேர்ந்து தேர்ந்து சார்ந்து சார்ந்து
நேர்ந்து வாமனை நினையின்1
சேர்ந்த2 வல்வினை தேய்ந்தக3 லும்மே."

இதன்கண் முதலடி நாலெழுத்தான் வந்தவாறு காண்க.

"குன்று கொண்டு நின்ற மாடு
பொன்ற வந்தமாரி
சென்று காத்த திறலடி தொழுமே."

இதன்கண் முதலடி ஐந்தெழுத்தான் வந்தது.

"ஆறு சூடி நீறு பூசி
ஏறும் ஏறும் இறைவனைக்4
கூறு நெஞ்சே குறையிலை நினக்கே."5

இதன்கண் முதலடி ஆறெழுத்தான் வந்தது

"போது சாந்தம் பொற்ப வேந்தி
யாதி நாதர்ச் சேர்வோர்
சோதி வானந் துன்னு வோரே."

(யாப். வி. 49)
என்பது முதலடி ஏழெத்தான் வந்தது

"தன்தோள் நான்கின் ஒன்று கைம்மிகூஉங்
களிறுவளர் பெருங்கா டாயினும்
ஒளிபெரிது சிறந்தன்றளியஎன் நெஞ்சே."

இது முதலடி எட்டெழுத்தான் வந்தது.

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி."

(குறுந். 2)
என்பது ஒன்பதெழுத்தான் வந்தது.

"காமம் செப்பாது கண்டன மொழிமோ."

(குறுந். 2)
என்பது பத்தெழுத்தான் வந்தது.

"தாமரை புரையுங் காமர் சேவடி"

(குறுந், கடவுள் வாழ்த்து)
என்பது பதினொ ரெழுத்தான் வந்தது.

"நாயுடை முதுநீர்க் கலித்த தாமரை."

(அகம். 61)
என்பது பன்னிரண்டெழுத்தான் வந்தது.

"அகலிரு விசும்பிற் பாயிருள் பருகி."

(பெருபாண். 1)
என்பது பதின்மூன்றெழுத்தான் வந்தது.

"யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை."

(அகம். 16)
என்பது பதினாலெழுத்தான் வந்தது.

"ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை"

(புறம்)
என்பது பதினைந்தெழுத்தான் வந்தது.

"விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்"

(குறுந். 101)
என்பது பதினாறெழுத்தான் வந்தது.

6"தேன்தூங்கும் உயர்சிமைய மலைநாறிய வியன்ஞாலம்"

(மதுரைக். 3)
என்பது பதினேழெழுத்தான் வந்தது.

"கடுஞ்சினத்த கொல்களிலும் கதழ்பரிய கலிமாவும்."

(புறம். 55)
என்பது பதினெட்டெழுத்தான் வந்தது.

"நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும்."

(புறம். 55)
என்பது பத்தொன்பதெழுத்தான் வந்தது.

"அமர்காணின் அமர்கடந்தவர் படைவிலக்கி எதிர்நிற்றலின்"

(புறம். 167)
என்பது இருபதெழுத்தான் வந்தது.
1. நேர்ந்து நேர்ந்து வாமனை நினையிற்.
2. சேர்தரு.
3. சேர்ந்தக.
4. ஈசனைக்
5. நமக்கே.
6. தேன்றூங்கிய வுயர்ச்சியை மலைஞாறிய வியன்ஞாலம்.
(48)