என்-னின். இத்துணையும் அடியும் அடிக்குரிய எழுத்துக்களும் ஓதினார்; இனி அவ்வடிக்கண் ஓசை வேறுபாடுந் தளையிலக்கணமு முணர்த்துவார் அத் தளைக்கண் வருவதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. தத்தஞ் சீர்நிலை வகையானுந் தளைநிலை வகையானும் இனிய ஓசைவேறுபாட்டினையுடைய ஐந்தடிக்கு முரிய தன் சீருள்வழித் தளைவேறுபாடு கோடல் வேண்டா என்றவாறு. எனவே சீர்தானே ஓசையைத் தரும் என்றவாறாம். உரிய தன்சீர் என்றது ஐந்தடியினும் ஏற்ற வழிநிலை பெறுந் தன் சீரென்று கொள்க. அஃதாவது குறளடியாகிய ஐந்தெழுத்தினும் ஆறெழுத்தினும் ஓரசைச்சீரும் ஈரசைச்சீரும் வருதலன்றி மூவகைச்சீர் வாராமை. பிறவாசிரியர் கொண்ட நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர்வெண்டளை, கலித்தளை, ஒன்றியவஞ் சித்தளை, ஒன்றாவஞ்சித்தளை என ஏழுவகையினும், வஞ்சித்தளை நிலைமொழி வஞ்சியுரிச்சீராக வருஞ்சீர்க்கு முதலசையோடு ஒன்றியது ஒன்றியவஞ் சித்தளை எனவும் ஒன்றாதது ஒன்றாவஞ்சித்தளை எனவும் வழங்குபவாதலின் அவ்விருவாற்றானும் தளையாற் பயனின்றி நிலைமொழியாகிய வஞ்சியுரிச்சீர் தானே ஓசையுணர்த்துதலின், வஞ்சித்தளை கோடல் வேண்டாராயினார். இனி வெண்சீர் வெண்டளையும் வெண்நீர் நிற்ப வருஞ்சீர் வெள்ளையும் வெண்சீராதல் இயற்சீராதல் வந்து வெண்டளையாக வேண்டுதலின் நிலைமொழியாகிய வெண்சீரை "வெண்சீரீற்றசை நிரையசையியற்றே " (செய்யு-28) என ஓதுதலின், அதனை நிரையீற்றியற்சீர் ஆக்கினால் வருஞ்சீர் நேர்முத லியற்சீராயின் அதுவும் இயற்சீர் வெண்டளையாம். அவ்வாறன்றி வருமொழியும் வெண்சீராயின் 'தன் சீருள்வழித் தளைவகை வேண்டா' என்பதனான் அடங்கும்.அதனான் இருவாற்றானும் வெண்சீர் வெண்டளை கொள்ளாராயினார்.இனி ஒழிந்த நான்குதளையும் கூறுகின்றாராயின் ஆசிரியத்தளையுங் கூறல் வேண்டா.அதுவும் இயற்சீரான் வருதலின் எனின், அதன்கண்ணே இயற்சீர்வெண்டளை கூறவேண்டுதலின் ஆசிரியத்தளையுங் கூறவேண்டுமென்க. (50)
1. தளைவகை என்னாது 'நிலை' என்றதனான் அவற்று இரண்டாசிரிய உரிச்சீரும் அடிமுதற்கண் நின்று சீராவதன்றி இடைவாரா என்பது கொள்க. 'தளைநிலை' என்னாது 'வகை' என்றதென்னை யெனின், உரிச்சீரால் தளை வழங்கின் ஓரடிக்கண் இரண்டுவரின் ஓசை உண்ணா தென்பது உணர்வித்தற் கென்பது. இவையும் இன்சீர்வகையொடு வருமெனவே தன்சீர் இயற்சீரொடு தட்கும் என்பதாம்... 'இன்சீர்' என்னாது 'வகை' என்றதனால் இயற்சீர்ப்பாற்படுத்து இயற்றிக்கொள்ளப்பட்ட அசைச்சீரும் சீரேயாம் ; தன் சீர்வகையினும் தளைநிலை வகையினும் இடையிட்டு வந்ததென்பது, (தொல், பொருள், ஙசுசு.பேரா.)
|