செய்யுளியல்

364அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய
தளைவகை ஒன்றாத் தன்மை யான.

என்-னின். வெண்பாவிற்குரிய அடியுந் தளையும் வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று .

அளவடியும் சிந்தடியும் வெண்பாவிற்குரிய தளைவகை ஒன்றாத் தன்மைக்கண் என்றவாறு.

எனவே ஒன்றுந் தன்மைக்கண் நெடிலடியும் சில வரும் என்று கொள்க.

இச்சூத்திரத்தால் வெண்பாவிற் குரியதோர் தளை உணர்த்தினாராம். சிந்தடியாவது ஏழெழுத்து முதல் ஒன்பதெழுத்தீறாகிய அடி.அளவடி யாவது பத்தெழுத்து முதலாகப் பதினான்கெழுத்தீறாகிய அடி.தளைவகை ஒன்றாமையாவது நிலைமொழியும் வருமொழியும் ஆகிய இயற்சீர் நேராயொன்றுவதும் நிரையாயொன்றுவதுமன்றி மாறுபடவருவது.அவ்வழி நிரையீற்றியற் சீர் நிற்ப நேர்வரினும் நேரீற்றியற்சீர் நிற்பநிரை வரினும் இயற்சீர் வெண்டளையாம்.இனி ஒன்றுந் தன்மையாவது வெண்சீர் நிற்க வருஞ்சீர் முதலசையோ டொன்றுவது வெண்டளையாம். இவ்விரண்டும் வெண்பாவிற்குத் தளையாமென்று கொள்க .

உதாரணம்

"மட்டுதா னுண்டு மணஞ்சேர்ந்து விட்டுக்
களியானை கொண்டுவா வென்றான் அளியார்முன்
யாரோ வெதிர்நிற் பவர்."

(யாப். வி. பக். 463)
இஃது ஏழெழுத்தான் வந்த அடி.

'இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது'

(நாலடி. 36)
இஃது எட்டெழுத்தான் வந்த அடி.

" சென்று முகந்து நுதல்சுட்டி மாறோர்த்து
வென்று வியர்த்தா னென்கோ."

(யாப். வி. பக். 464)
இஃது ஒன்பதெழுத்தான் வந்த அடி.

'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு.'

(குறள். 12)
இது பத்தெழுத்தான் வந்த அடி.

'ஏரி னுழாஅர் உழவர் புயலென்னும்.'

(குறள். 14)
இது பதினொரெழுத்தான் வந்த அடி.

'மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்'

(குறள். 3)
இது பன்னிரண்டெழுத்தான் வந்த அடி.

'இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன்'

(குறள். 5)
இது பதின்மூன்றெழுத்தான் வந்த அடி.

'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்'

(குறள். 2)
இது பதினான்கெழுத்தான் வந்த அடி.

"முகமறியார் மூதுணர்ந்தார் முள்ளெயிற்றார் காமம்
அகமறைந்தான் வாழுமென்றார மகமறையாம்
மன்னைநீ வார்குழை வையெயிற்றா யென்றோமற்
றென்னையும் வாழு மெனின்."

(யாப். வி. பக். 415)
இது பதினைந்தெழுத்தான் வந்த அடி.

'படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்.' (குறள். 606)

இது பதினாறெழுத்தான் வந்த அடி.இவையிரண்டும் நெடிலடி.

(53)