என்-னின்.இது கலிப்பாவிற்கு அடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அளவடியின் மிக்க பதின்மூன்றெழுத்து முதலாக நெடிலடியுங் கழிநெடிலடியுமாகிய இருபதெழுத்தின் காறும் வரும் அடி கலிப்பாவிற்கு அடியாம் என்றவாறு. இவ்விலக்கணங் கலித்தளை வருமிடத்தே கொள்க.கலியடியென்னாது கலித்தளையடி என்றதூஉம் இவ்வேறுபாடு குறித்தென்க. 'மரல்சாய மலைவெம்ப மந்தி உயங்க.' (கலித். 13) இது பதின்மூன்றெழுத்தான் வந்தது.'வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட' (கலித். 66) இது பதினான்கெழுத்தான் வந்த அடி.'அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்.' (கலித். 11) இது பதினைந்தெழுத்தான் வந்த அடி.'அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்.' (கலித். 11) இது பதினாறெழுத்தான் வந்த அடி.'முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையென.' (கலித். 56) இது பதினேழெழுத்தான் வந்த அடி.'அறனின்ற விதையொழியா னவலங்கொ ண்டதுநினையான்' (யாப். வி. பக். 468) இது பதினெட்டெழுத்தான் வந்த அடி .'உகுபனிகண் உறைப்பவுநீ ஒழிபொல்லாய் செலவலித்தல்.' (யாப். வி. பக். 468) இது பத்தொன்பதெழுத்தான் வந்த அடி.'நிலங்கிளையா நெடிதுயிரா நிரைதளரா நிரைதொடியாள்.' (யாப். வி. பக். 468) இஃது இருபதெழுத்தான் வந்த அடி.(54)
|