செய்யுளியல்

368இயற்சீர்1 வெள்ளடி ஆசிரிய மருங்கின்
நிலைக்குரி மரபின் நிற்பவும் உளவே.
என்-னின்.இஃது ஆசிரியப்பாவின்கண் வெண்பாவடி மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இயற்சீர்வெண்டளையா னாகிய வெண்பாவடி ஆசிரியப்பாவின்கண் நிற்றற்குரிய மரபினான் நிற்பனவுமுள என்றவாறு.

'உள' என்றதனாற் பலவடியும் வரப்பெறும் என்று கொள்க.வெண்டளை என்னாது 'அடி' என்றதனால், தளைவிரவுதல் சிறுபான்மை என்றுகொள்க.


உதாரணம்

'நெடுங்கயிறு வலந்த' என்னும் பாட்டினுள்,

'கடல்பா டொழிய இனமீன் முகந்து'

(அகம். 30)

என்றது இயற்சீர் வெண்டளை யடி,பிறவு மன்ன.
(57)

1. முழுவதூஉம் ஆசிரியத்தளை வரின் வெண்பா சிதையுமாகலின் இதனையே சொல்லின் முடிவிலக்கணத்தான் வெண்பா என்றான். எனவே வேறோசை விராயவழித் தன்னோசை அழிதல் இதற்குப் பெரும்பான்மையாயிற்று. ஆசிரியமாயின் அவ்வாறு அழியாது என்பது கருத்து.என்போலவோ எனின் பளிங்குடன் அடுத்த பஞ்சி வேற்றுமையால், பளிங்கு வேறுபடினல்லது பஞ்சி வேறுபடாததுபோல என்பது.இதனானே வெள்ளை என்பது ஒப்பினான் ஆகிய பெயர் என்பதூஉம் பெற்றாம்.(தொல், பொருள், 374, பேரா.)