செய்யுளியல்

369வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும்
ஐஞ்சீர்1 அடியும் உளவென மொழிப.
என்-னின்.இதுவும் ஆசிரியப்பாவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

இயற்சீர் வெண்டளை விரவியும் ஆசிரியத்தளை விரவியும் ஐஞ்சீரடியும் ஆசிரியப்பாவின்கண் வருவன உள என்றவாறு.

'உண்டு' என்னாது 'உள' என்றதனான் ஒருபாட்டிற் பல வருதலுங் கொள்க. ஆசிரியமென்பது அதிகாரத்தான் வந்தது.உதாரணம் முன்னர்க்காட்டுதும்.

(58)

1. 'ஐஞ்சீரடி' என்பதனை அளவடி மூன்றுபாவிற்கு உரித்தென்றால் அவ்வப்பாவிற்கு வேறுவேறு கொண்டாற்போல, ஐஞ்சீரடியும் பாத்தோறும் வேறுபடுத்துக்கொள்க.(தொல், பொருள், 375, பேரா.)