அகத்திணை இயல்

371முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை.

இதுவும், பொருள்வயிற் பிரிவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை - (ஈண்டு அதிகரிக்கப்பட்ட பிரிவு காலிற்பிரிவும் கலத்திற்பிரிவும் என இருவகைப்படும்; அவற்றுள்) கலத்திற்பிரிவு தலைமகளுடன் இல்லை.

எனவே, காலிற்பிரிவு தலைமகளை உடன்கொண்டு பிரியவும் பெறும் என்றவாறாம்.

கலத்திற் பிரிவு. தலைமகளை ஒழியப் பிரிந்தமைக்குச் செய்யுள்

2"உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின் றாகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்
கோடுயர் திணிமணல் அகன்துறை நீகான்
மாட ஒள்ளெரி மருங்கறிந்து ஒய்ய
ஆள்வினைப் பிரிந்த காதலர் நாள்பல
கழியா மையே அழிபடர் அகல
வருவர் மன்னால் தோழி தண்பணைப்
பொருபுனல் வைப்பின் நம்மூர் ஆங்கண்
கருவிளை முரணிய தண்புதல் பகன்றைப்
பெருவளம் மலர அல்லி தீண்டிப்
பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடிநிரைத் தூங்க
அறன்இன் றலைக்கும் ஆனா வாடை
கடிமனை மாடத்துக் கங்குல் வீசித்
திருந்திழை நெகிழ்ந்து3 பெருங்கவின் சாய
நிரைவளை ஊருந் தோளென
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே "

(அகம்.255)
என வரும்.

காலிற் பிரிவுக்கு உதாரணம் வந்துழிக் காண்க.

(37)

1. முந்நீர் வழக்கம் ஓதலும் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மையாற் செல்லுஞ் செலவு. இனி, இச் சூத்திரத்திற்கு. ' பொருள் வயிற்பிரிவின்கண் கலத்திற் பிரிவு தலைவியுடன் சேறலில்லை. எனவே, காலிற் பிரிவு தலைவியுடன் சேறல் உண்டு, என்று பொருள் கூறுவார்க்குச் சான்றோர் செய்த புலனெறி வழக்கம் இன்மை உணர்க. இனி உடன் கொண்டு போகுழிக்கலத்திற் பிரிவின்று; காலிற்பிரிவே உளதென்பாரும் உளர்

(நச்சி.)

2. இது தோழி தூதுவிடுவது காரணமாக உரைத்தது. இம் மணிமிடை பவளத்துப் பின்பனி வந்தவாறும், நண்பகல் கூறாமையும் அவர் குறித்த காலம் இதுவென்பது தோன்றியவாறும் காண்க. (தொல். பொருள். 11) என்றும், ' உலகு கிளர்ந்தன்ன ' (தொல் பொருள் - 24) என்னும் அகப்பாட்டுள் வணிகன் தலைவனாகவும் கொள்ளக்கிடத்தலின் தலைவியும் அவ்வருணத் தலைவியாம் என்றுணர்க.

(நச்சி.)

(பாடம்) 3. ஞெகிழ்ந்து.