செய்யுளியல்

377வஞ்சித்1 தூக்கே செந்தூக் கியற்றே.
என்-னின் வஞ்சிப்பாவிற்கு ஈறு உணர்த்துதல் நுதலிற்று.

வஞ்சிப்பாவின் இறுதி ஆசிரியப்பாவின் இயல்பிற்று என்றவாறு.

தூக்கெனினும் இறுதியெனினும் ஒக்கும். செந்தூக்கெனினும் ஆசிரிய வீறு எனினும் ஒக்கும்.' செந்தூக் கியற்று' என்றமையால் ஈற்றயலடி முச்சீரான் வருதலும் நாற்சீரான் வருதலுங் கொள்க.

உதாரணம்

"தொடியுடைய தோள்மணந்தனன்"

என்னும் பாட்டுள்.

"இடுக ஒன்றோ2 சுடுக ஒன்றோ
படுவழிப் படுகவிப் புகழ்வெய்யோன் தலையே."

(புறம். 239)
இதனுள் ஈற்றயலடி நாற்சீரான் வந்தது.

"பூந்தாமரைப் போதலமர"

என்னும் பாட்டுள்.

"மகிழு மகிழ்தூங் கூரன்
புகழ்த லானாப் பெருவண் மையனே"

(யாப். வி. பக். 74)
இதனுள் ஈற்றயலடி முச்சீரான் வந்தது.
(66)

1. தனிச்சொல் வேண்டுமென்று பிற்காலத்து நூல் செய்தாரும் உளர். அதுசான்றோர் செய்யுள் எல்லாவற்றோடும் பொருந்தாமையானும், பிற்காலத்தில் செய்த நூல்பற்றி முற்காலத்துச் செய்யுட்கெல்லாம் இலக்கணம் சேர்த்துதல் பயமின்றாதலானும் அஃதமையாது என்பது. வஞ்சிப்பாவின் ஈற்றடி வரைந்தோதவே இடையாயின எல்லா அடியும் வரப்பெறும் என்பதாம்.(தொல்,பொருள்.383.பேரா.)
2. (பாடம்) வொன்றே.