| என்-னின். யாப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று எழுத்து முதலாக அசைச்சீர் அடி என ஈண்டோதப்பட்ட அடியினாற்றான் குறித்தபொருளை யிறுதியடியளவு முற்றுப்பெற நிறுத்துதல் யாப்பென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. இது சொல்லவேண்டிய தென்னை? செய்யுட்பாடுவார்க்கு இயல்பன்றோ எனின், ஈண்டுச் செய்யுளுறுப்புள் ஓதுகின்றாராதலின் யாதானு மொருபொருட்கட் பல சொற்றொடுத்து வழங்குங்கால் குறித்தபொருளை முடிக்கவேண்டுஞ் சொல்லே சேர்த்துக் கூறல் வேண்டும் எனவும் அது மிகாமற் குறையாமற் கூறல் வேண்டும் எனவும் இலக்கணங் கூறல் வேண்டும் என்க. அதன்வகை முன்னர்க் காட்டுதும். (72)
1. மாத்திரை முதலாக என்னாது 'எழுத்து' என்றது என்னையெனின், எழுத்தும் அசையும் சீருங் கொண்டியன்ற ஒரோ அடிக்கண்ணே இன்பஞ்செய்யும்; அது பொருட்காய் இன்றியமையாமையின் எழுத்து முதலாக என்றான் என்பது ' ஈண்டிய அடி' என்பது அவை மூன்றும் ஒன்றாகத் தொடர்ந்து ஈண்டிய அடி என்றவாறு.(தொல், பொருள்,பேரா.)
|