என்-னின்.இதுவும் அதன்பகுதி உணர்த்துதல் நுதலிற்று. பாட்டு முதலாக முதுசொல்லீறாகச் சொல்லப்பட்ட எழுநிலத்தினும், வளவிய புகழையுடைய சேரன் பாண்டியன் சோழன் என்னும் மூவரது தமிழ்நாட்டகத்தவர் வழங்கும் தொடர்மொழிக்கண் வரும் மொழி யாப்பாவது என்றவாறு. எனவே யாப்பாவது;- பாட்டியாப்பு, உரையாப்பு, நூலியாப்பு, மொழியாப்பு,பிசியாப்பு அங்கத யாப்பு, பழமொழியாப்பு என ஏழுவகைப்படும். மேலைச்சூத்திரத்துள், 'குறித்த பொருளை முடிய நாட்டல்' என்றமையானும், இச்சூத்திரத்துள்,'நாற்பேரெல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது' என்று ஓதினமையாலும், குறித்தபொருள் முடியுமாறு சொற்றொடுத்தல் என்று கொள்ளப்படும்.
உதாரணம்"தாமரை புரையுங் காமர் சேவடிப் பவளத் தன்ன மேனித் திகழொளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற் சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே." (குறுந். கடவுள்வாழ்த்து) இதனுட் குறித்தபொருள் முருகவேள் காப்ப உலகங் காவற்பட்டது என்னும் பொருள். இதனை முடித்தற்பொருட்டு எழுத்துமுதலாகி வந்து ஈண்டிய அடிகளெல்லாவற்றானும் நாட்டியவாறு கண்டுகொள்க. (73) 1. (பாடம்) முதுசொலோ டவ்வேழ். 2. 'வண்புகழ் மூவர்' என்பது வளனுடைமையாற் புகழ்பெற்றார் என்றவாறு, அஃதாவது கொடுத்துப்பெறும் புகழ் எனக்கொள்க. மூவர் எனப்படுவார் தமிழ்நாட்டு மூவேந்தருமாயினார். 'தண்பொழில் வரைப்பு' என்பது நிலத்துக்கு நிழல்செய்யும் நாவலம்பொழிலுள் வரைந்து கொள்ளப்படும் வரைப்பினையுடைய என்றவாறு......... 'வடவேங்கடந் தென்குமரி யாயிடை' என்புழி நான்கெல்லையும் கூறினான் என்பது.(தொல்,பொருள்.361.பேரா.)
|