செய்யுளியல்

385மரபே1 தானும்
நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன்று.2

என்-னின், மரபுஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

மரபாவதுதான் இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்னும் நாற்சொல்லின் இயற்கையானே யாப்பின் வழி பட்டது என்றவாறு.

குறித்த ஒரு பொருளை முடியச் சொற்றொடுக்குங்கால் இயற்சொல்லாகிய பெயர்வினை யிடை யுரியானும் , ஏனைத் திரிசொல் திசைச்சொல் வட சொல்லானும், எழுவகை வழுவும் படாமல் புணர்ப்பது என்றவாறாம்.

அவற்றுள் இயற்சொல் மரபாவது சொல்லதிகார இலக்கணத்தோடு பொருந்துதல்.

திரிசொல் மரபாவது தமிழ்நாட்டகத்தும் பலவகை நாட்டினும் தத்தமக்குரித்தாக வழங்கும் மரபு.

திசைசொன் மரபாவது செந்தமிழ்சூழ்ந்து பன்னிருநிலத்தினும் வழங்கும் மரபு.

வடசொன்ன மரபாவது திரிந்தவகையாகிய சொல்மரபு.

யாதானும் ஒருசெய்யுட்செய்யுங் காலத்துப் பொருளுணர்த்துஞ் சொற்கள் இவையாதலின் இவை ஒருபொருட்குரித்தாகிய ஆண்பெயரும் பெண்பெயரும் குழவிப் பெயரும் முதலாயின பிறபொருட்கண் வாராமையான் அவற்றை அவ்வம்மரபினாற் கூறுதலும் ஒருமை பன்மை மயங்காமையும் பெயரும், வினையும் முடிவுபெறக் கூறுதலும் வேண்டுதலின் இவ்விலக்கணமுங் கூறல் வேண்டிற்று.

(74)

1. ஒருகாலத்து வழங்கப்பட்ட சொல் ஒருகாலத்து இலவாகலும் பொருள் வேறுபடுதலும் உடைய. அதோளி இதோளி உதோளி எனவும் குயின் எனவும் நின்ற இவை ஒருகாலத்துளவாகி இக்காலத்திலவாயின. இவை முற்காலத்துள வென்பதே கொண்டு வீழ்ந்த காலத்தும் செய்யுள் செய்யப்படமாட்டா. அவை ஆசிரியர் நூல் செய்த காலத்துளவாயினும் கடைச் சங்கத்தார் காலத்து வீழ்ந்தமையிற் பாட்டினுந் தொகையினும் அவற்றை நாட்டிக்கொண்டு செய்யுள் செய்திலர்; அவற்றுக்கு இது மரபிலக்கணமாகலின் என்பது. (தொல்,பொருள்,392,பேரா.)

2. (பாடம்) பட்டன.