என்-னின் இது தூக்காமாறு உணர்த்துவார் அவற்றுள் ஆசிரியத்திற்குரிய ஓசை உணர்த்துதல் நுதலிற்று. அகவல் என்னும் ஓசை ஆசிரியத்திற் கென்றவாறு. தூக்கெனினும் ஓசையெனினுமொக்கும். அகவல் என்பது ஆசிரியன் இட்டதோர் குறி. அதுவருமாறு: "செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட் டியானை கழல்தொடிச் சேஎய் குன்றங் குருதிப் பூவின் குலைக்காந் தட்டே ." (குறுந். 1) இதனுள் எழுத்தளவு மிகாமற் குறையாமல் உச்சரிக்க அவ்வழி நின்ற ஓசையால் ஆசிரியம் வந்தவாறு காண்க. (75) 1. அகவிக் கூறுதலான் அகவல் எனக் கூறப்பட்டது. அஃதாவது கூற்றும் மாற்றமுமாகி ஒருவன்கேட்ப அவற்கு ஒன்று செப்பிக் கூறாது தாம் கருதியாவாறெல்லாம் வரையாது சொல்லுவதோர் ஆறும் உண்டு. அதனை வழக்கின் உள்ளார் அழைத்தல் என்றும் சொல்லுப . அங்ஙனம் சொல்லுவார் சொல்லின்கண் எல்லாம் தொடர்ந்து கிடந்த ஓசை அகவல் எனப்படும்... கழங்குமிட்டு உரைப்பார்.......அங்ஙனமே வழக்கின் உள்ளதாய்க் கூறும் ஓசை ஆசிரியப்பா எனப்படும் என்றவாறு. (தொல்,பொருள்,393,பேரா.)
|