என்- னில் , கலிப்பாவிற்கு ஓசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று . துள்ளலோசை கலிப்பாவிற்காம் என்றவாறு . துள்ளுதலாவது ஒழுகுநடைத்தன்றி இடையிடை யுயர்ந்து வருதல் ; கன்று துள்ளிற்றென்றாற் போலக் கொள்க . உதாரணம்" அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேளினி ." (கலித்.11) என்றவழி ' அரிதாயவறன் ' எனநின்றவழிச் செப்பலோசைத்தாகிய வெண்சீர்ப் பின்னும் வெண்டளைக்கேற்ற சொல்லொடு புணராது ஆண்டெழுந்த ஓசை துள்ளிவந்தமையால் துள்ளலோசை யாயிற்று.(77)
|