செய்யுளியல்

391அவ்வியல் பல்லது1 பாட்டாங்குக் கிளவார்.
என்-னின் ,பாக்கள் எல்லாவற்றிற்கும் உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

மேற் சொல்லப்பட்ட ஓசை வகையா னல்லது பாட்டாங்குக் கூறார் என்றவாறு.

பாட்டாங்குக் கூறுதலாவது ஓசை ஒழித்துச் சீருந்தளையும் அடியும்படக் கூறுதல். அவ்வாறு படக் கூறுதலால் பாட்டாங்கு ஆகாதென்ப தூஉம் அடியுந்தொடையும் பெறவந்ததாயினும் நூலின்பாற்படுதல் உரையின் பாற்படுதல் என்பதூஉம் கூறியவாறாம். அது வருமாறு:

"ஐவகை அடியும் விரிக்குங் காலை
மெய்வகை அமைந்த பதினேழ் நிலத்தும்
எழுபது வகையின் வழுவில வாகி
அறுநூற் றிருபத் தைந்தா கும்மே."

(செய்யுளியல். 48)
என்பது ஆசிரியப்பாவிற்குரிய இலக்கணமுடைத்தாயினும் ஓசையின்மை யான் ஆசிரியம் எனப்படாது நூலெனப்படும் என்று கொள்க.
(80)

1. அவ்வியல் அல்லது.