என்-னின் எதுகை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. அடிதொறும் முதலெழுத்தொன்றாமல் இரண்டாமெழுத்து ஒன்றின் எதுகை யாகும் என்றவாறு. அஃதேல் முதலெழுத்தும் ஒன்றி இரண்டாமெழுத்தும் ஒன்றில்யாதாகு மெனின். முந்துற்ற மோனையாற் பெயரிட்டு வழங்கப்படும் என்க. உதாரணம்" அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழா அய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே." (கலித். 11) எனவரும்.(87)
|